logo
எடப்பாடி அரசு அடிமை அரசாக இருந்ததால் தமிழகம் பாழாகிப்போனது: நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

எடப்பாடி அரசு அடிமை அரசாக இருந்ததால் தமிழகம் பாழாகிப்போனது: நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

27/Mar/2021 07:37:10

புதுக்கோட்டை, மார்ச்: எடப்பாடி அரசு அடிமையாக இருந்ததால்தான் தமிழகம் பாழாகிப்பேோனது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.


புதுக்கோட்டை அண்ணாசி அருகில் சனிக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்  புதுக்கோட்டை தொகுதி வேட்பாளர் சசிக்குமார், ஆலங்குடி தொகுதி வேட்பாளர் சி. திருச்செல்வம், கந்தர்வகோட்டை(தனி) தொகுதி

 வேட்பாளர் ரமீலாமோகன்ராஜ், அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹிமாயூன் கபீர்,  திருமயம் தொகுதி வேட்பாளர் சிவராமன், விராலிமலை தொகுதி வேட்பாளர் அழகுமீனா ஆகியோரை ஆதரித்து  சீமான் மேலும் பேசியதாவது:


சாதனைகளைச் சொல்லி வாக்குக்கேட்க முடியாத அதிமுகவினர்  மின் தடையை ஏற்படுத்தி இருட்டி  வாக்காளர்களுக்கு  பணம் விநியோகிக்கும் வேலையில் இறங்கியிருப்பது அவமானம். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ஜிஎஸ்டி, நீட் தேர்வு, உதய் மின்திட்டம் ஆகிய திட்டங்களை முழு மூச்சாக  எதிர்த்தார். ஆனால், அவர் மறைந்த பிறகு அனைத்துக்குமே அடிமையைப் போல தலையாட்டி கையெழுத்துப் போட்டது எடப்பாடி அரசு. அதனால்தான் இந்த அரசை அடிமை அரசு  என்கிறோம்.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கான சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்மானம் போட்டு அனுப்புவோம். அதற்கு, நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது மத்திய அரசிடம் இருந்து பதில் வரும். அதை நாங்கள் ஒரு போதும் மதிக்க மாட்டோம் என்று பதில் அனுப்புவோம். இந்திய மருத்துவக்கழகம் எங்களை அங்கீகரிக்க வேண்டாம் என்று கூறுவோம்.

மண்டியிட்டு சரண் அடைவது தமிழர் பாரம்பரியம் கிடையாது. சரண் அடைந்தாலும் சண்டையிட்டு வீழ்வது வீரம். நாங்கள் ஒரு புள்ளியில் இருந்து தொடங்குகிறோம். மொழி மீட்சி என்பது நமது முதல் பொறுப்பாக இருக்கிறது. நமது தாய் மொழியை காணவில்லை. முதல் மொழியாக, முதல் மனிதன் பேசிய மொழியாக உலக மொழிகள் அனைத்துக்கும் தாய் என் தாய் தமிழ் மொழி. தமிழ் என்ற தாய் மொழி என்ற திமிரும் நமக்கு உண்டு. அப்படிப்பட்ட மொழியை மீட்க வேண்டும். தமிழ் நம் பேச்சு மொழி மட்டும் அல்ல. மூச்சு மொழி.

உங்கள் பிள்ளைகளாகிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். ஏதோ 4 அல்லது 10 சீட்டுகளை கூட்டணியில் வாங்கி, மேஜையை தட்டுவதில் எந்த பயனும் இல்லை. ஒட்டுமொத்தமாக வென்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் அனைத்தையும் தமிழர்களிடம் வரவேண்டும்.

தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை என்ற நிலை உருவாகும்.  கடைகளின் விளம்பர பலகைகளில் கூட தமிழ் இல்லை. இந்த நிலை எல்லாம், நாம் தமிழர் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற ஒரே நொடியில் மாற்றப்படும்.

அனைவருக்கும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். இலவசம் கிடையாது. விவசாயத்துக்கு அரசு ஊதியம் வழங்கும். உற்பத்தி பொருட்களை அரசே விற்றுக்கொள்ளும்.தமிழ்நாட்டில் குவிந்து இருக்கும் வடமாநிலத்தவர்கள் இப்போது 1½ கோடிபேர் தமிழ்நாட்டில் இருக்கி றார்கள்.

அவர்களில் 20 லட்சம்பேர் வாக்கு உரிமை பெற்று இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள். எப்படி தமிழர் குடியிருப்பில் சிங்களவர்களை வைத்து தமிழர்களை விரட்டினார்களோ, அதே நிலை தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறது.  தமிழகம் அரசியல் விடுதலை, ஜனநாயக புரட்சி பெற வேண்டும் என்றால் விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது மாற்றத்தைவிரும்பும் மக்களின் பெருங்கனவுக்கான வெற்றி என்றார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

                                                                               

        


Top