08/Dec/2020 07:29:26
லண்டன்: உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலுடன் உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்தில் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 95% செயல்திறனைக் கொண்டிருந்தது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவசரகால பயன்பாட்டிற்காக இங்கிலாந்து அரசு 8 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. அதன்படி, பைசர்-பயோஎன்டெக்கின் கரோனா தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக, இன்று சோதனை முயற்சியாக மார்கரெட் கீனன் என்ற 90 வயது மூதாட்டி ஒருவருக்கு முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி 81 வயதான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவருக்கு செலுத்தப்பட்டது.
இந்த தடுப்பூசிகளை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் (மைனஸ் 94 டிகிரி பாரன்ஹீட்) என்ற குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.