logo
நாளை பொது வேலைநிறுத்தம் ஈரோடு மாவட்டத்தில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு

நாளை பொது வேலைநிறுத்தம் ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

07/Dec/2020 05:23:12

ஈரோடு, டிச: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும்  நாளை(டிச.8) பொது வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 இந்நிலையில், தலைநகர் தில்லியில் பல்வேறு பகுதிகளில் சென்ற  லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகத்திலும் திமுக மற்றும்  காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில்,  மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நாளை(டிச.8) பொது வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஈரோடு மாவட்டத்திலும் நாளை பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு ள்ளது.  தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி, சி .ஐ.டி.யு,  ஐ.என்.டி.யூ.சி  உட்பட 10 -க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 இதைப் போன்று, பல்வேறு விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட கடைகள் நடை அடைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு வ.உ.சி பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி பழ வியாபாரிகள் சங்கம் சார்பில் நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை ஒருநாள் பழ கடைகள் அனைத்தும் மூடப்படும் என அதன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இதனால் நாளை 162 பழக் கடைகள் மூடப்பட்டு இருக்கும்.இதேபோல் பெருந்துறை தினசரி மார்க்கெட்  வியாபாரிகளும், சுமைதூக்கும்  தொழிலாளர்களும் முழு ஆதரவு தெரிவித்து நாளை கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று பெருந்துறை தினசரி மார்க்கெட் பகுதியில் நடந்தது. கூட்டத்தில், தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்   த. தெய்வசிகாமணி, பழனிச்சாமி, .கோபாலகிருஷ்ணன், செல்வராஜ், ஜீவானந்தம், அண்ணாதுரை, எஸ்.ஆர்.கணேசன், செந்தில் குமார்,  ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.சின்னசாமி, ஏஐடியுசி மார்க்கெட் சங்க கிளை செயலாளர்.குமார், துணைச் செயலாளர் திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில், நாளை ஒருநாள்(8.12.2020) பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால்,  ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். முக்கிய சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 


Top