logo
 இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளில் நாளை முதல் வகுப்புகள் தொடக்கம்: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளில் நாளை முதல் வகுப்புகள் தொடக்கம்: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

06/Dec/2020 06:06:57

சென்னை, டிச:பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2-ந்தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) முதல் கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளும், அவர்களுக்கான விடுதிகளும் தொடங்கப்பட உள்ளன.

மேலும், மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் தொடங்க நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. 2020–21-ஆம் கல்வியாண்டில் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் 1.2.2021-இல் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வகுப்புகள் திறப்பையொட்டி அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிடப்பட்டறது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில்குறிப்பிட்டிருப்பதாவது:  கல்லூரி வளாகங்களில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி பயன்பாடுகளை முறையாக மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளைத் திறக்கக்கூடாது. கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மாணவர்களை கல்லூரிக்கு வர அனுமதிக்கக்கூடாது.

50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இணையதள வகுப்புகளையும் தொடர வேண்டும்.

இதுதவிர தேவைக்கேற்ப பாடவேளைகளின் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். விடுதியின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக பராமரிக்கவேண்டும். சாப்பிடும் அறைகளில் மாணவர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவேண்டும். கல்லூரிக்கு அருகே உள்ள உறவினர் வீடுகளில் மாணவர்கள் தங்கி கொள்ளவும் அனுமதி தரலாம். வளாகங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

வெவ்வேறு இடங்களில் இருந்து விடுதிக்கு வரும் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கவேண்டும். அவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழோடு வந்தாலும் அதனை சோதிக்க திட்டமிடவேண்டும்.

கல்லூரி நிர்வாகம் தினமும் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top