logo
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம்:  ரூ.700 கோடி நிதி ஒதுக்கீட்டில் முதல்கட்டப்பணிகளுக்கு முதல்வர் விரைவில் அடிக்கல்- அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம்: ரூ.700 கோடி நிதி ஒதுக்கீட்டில் முதல்கட்டப்பணிகளுக்கு முதல்வர் விரைவில் அடிக்கல்- அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

20/Sep/2020 10:16:23

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துககான ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  முதற்கட்ட பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விரைவில் அடிக்கல் நாட்டி தொடக்கி வைக்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில், எம்எல்ஏ ஆறுமுகம் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 108 அவசர சிகிச்சைக்காக புதிய ஊர்தி சேவை தொடக்கி வைத்த அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது:

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக் கூடிய 9 ஊராட்சிகளில் மையப் பகுதி ஆதனக்கோட்டை பகுதியின் முன்னேற்றத்துக்காக   அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்தவகையில் ஆதனக்கோட்டையில் புதிய 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை 8 கி.மீ. தொலைவில் உள்ள கந்தர்வக்கோட்டையில் இருந்து வழங்கப்பட்டு வந்தது. தற்போது இங்கு தொடங்கப்பட்டுள்ள  இச்சேவையினை பொதுமக்கள் அவசர காலங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கனவே 2001 -இல் இப்பகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பள்ளிக்கூடம், அரசு ஆரம்ப சுகாதாரநிலையம், சித்த மருத்துவப் பிரிவிற்கு புதிய கட்டடம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் வகையில் 110 கே.வி திறன் கொண்ட துணை மின்நிலையம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் ஆதனக்கோட்டையில் செயல்படுத்தப்பட்டது. மேலும், இப்பகுதியில் கஜா புயல் சீரமைப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது கொரோனா நிவாரணப் பொருட்களும் அனைவருக்கும் தவறாமல் வழங்கப்பட்டுள்ளது. சாலை வசதி உள்பட பல்வேறு  அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

மேலும், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டு கால கோரிக்கையினை ஏற்று காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் முதற்கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இத்திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டி தொடக்கி வைக்கவுள்ளார் என்றார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயலெட்சுமி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரிய லூயிஸ் பெக்கி ஹோம்ஸ், துணை இயக்குநர் கலைவாணி, 108 அவசர சிகிச்சை ஊர்தி செயல் தலைவர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

Top