logo
கரோனா பொதுமுடகத்தில் பனைவிதைகளை சேகரித்து சுதந்திர தினத்தில் நடவு செய்த மாணவிகள்.

கரோனா பொதுமுடகத்தில் பனைவிதைகளை சேகரித்து சுதந்திர தினத்தில் நடவு செய்த மாணவிகள்.

15/Aug/2020 06:36:00

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கரோனா பொதுமுடக்கத்தில் சேகரித்த பனைவிதைகளை மாணவிகள் இருவர் சுதந்திர தினத்தில் நடவு செய்தனர்.


  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள  செரியலூர் இனாம் கிராமத்தைச் சேர்ந்தவர் இரும்பொறை. விவசாயியான இவரது மகள்கள் மாட்சிமை(18), உவகை(17). இருவரும் வெளியூரில் கல்லூரி, பள்ளியில் பயின்றுவருகின்றனர். பொதுமுடக்கத்தால் ஊரில் தங்கியுள்ள இருவரும் பெற்றோருடன் சேர்ந்து விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

   இந்நிலையில், மாணவிகள் இருவரும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு, தினசரி பனை விதைகளை சேகரித்து வழங்கி வருகின்றனர்.மேலும், சுதந்திர தினத்தில், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், செரியலூர் இனாம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பனைவிதைகளை சனிக்கிழமை நடவு செய்தனர்.


இதுகுறித்து மாணவிகள் கூறியது:


நீர்நிலைகளை பாதுகாக்கவும், பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான இளைஞர்கள், தன்னார்வலர்கள் பனைவிதைகளை நட்டுவருகின்றனர். கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் தங்கியுள்ளதால், இந்த பொதுமுடக்கத்தை பயனுள்ளதாக்க பனைவிதைகளை நடும் தன்னார்வலர்களுக்கு எங்கள் பகுதியில் கிடக்கும் பனைவிதைகளை சேகரித்து வழங்க முடிவு செய்து, தினசரி பனைவிதைகளை சேகரித்து வருகிறோம்.

 இதுகுறித்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்தோம். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பனைவிதைகளை சேகரித்து வழங்கும் படி கேட்டுக்கொண்டனர். அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளை கேட்டுள்ளனர்
  இதுவரை
நாங்கள் 1000 விதைகளை சேகரித்து அனுப்பி உள்ளோம். பொதுமுடக்கம் முடிந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வரையில் தொடர்ந்து பனை விதைகளை சேகரித்து வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும்,  எங்கள் பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக  சுதந்திர தினத்தில் நீர்நிலைகளின் கரைகளில் பனைவிதைகளை  நடவு செய்துள்ளோம் என்றனர்.


Top