logo
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

29/Nov/2020 11:24:54

புதுக்கோட்டை: பள்ளிக் கல்வித் துறையில் மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள  6 துணை இயக்குநர் பணியிடங்கள்  மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள 6  முதல்வர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள எட்டு துறைகளில் முக்கியமான துறைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது மாநில கல்வி இயல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். இந்நிறுவனத்தின் மாநில இயக்குநர்  அலுவலகம் சென்னை  நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இயங்கி வருகின்றது. இந்த அலுவலகம் மாநிலம் முழுவதுமாக  தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடத்துதல், மாநிலம் முழுதும் உள்ள தொடக்கக் கல்வி ஆசிரிய பயிற்சி நிறுவனங்களைத் துவக்குதல்,  அவற்றிற்கான அங்கீகாரம் வழங்குதல்,   அப்பள்ளிக்கான ஆசிரியர்கள் நியமனம் சார்ந்த பணிகள் .

ஒன்று முதல் 12  வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை அனுபவம் மிக்க பேராசிரியர்களைக் கொண்டு பாடத் திட்டங்களை உருவாக்கி அவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்த்தல்,  மாநில அளவில் அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் தேவையான பயிற்சிகளை கட்டமைத்து செயல்படுத்துதல்,  மாணவர்களின் திறமைகளை அதிகரிக்கும் வகையிலான கல்வி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் ஒன்று முதல் 12 வகுப்புகள் வரையில் கல்வி தொலைக்காட்சிக்குக் தேவையான ஒளி மற்றும் ஒலி நாடாக்களைத் தயார் செய்து அவற்றை கல்வித் தொலைக் காட்சி மூலமாக மாணவர்களைப் பயன்பெறச் செய்தல் போன்ற பணிகளை மாநில இயக்ககம் செய்து வருகின்றது.

அதே போல் மாவட்டந்தோறும் முதன்மைக் கல்வி அலுவலர் பதவிக்கு நிகரான முதல்வரின் தலைமையில் மாவட்ட கல்வி இயல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகின்றது. இந்நிறுவனத்தில் முதல்வர் முதுநிலை விரிவுரையாளர்கள். விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணிக்கான நிதிக் காப்பாளர் கண்காணிப்பாளர். உதவியாளர்கள். இளநிலை உதவியாளர்கள். தட்டச்சர் சுருக்கெழுத்துத் தட்டச்சர் அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களைக் கொண்டு செயல்படுகிறது.

இந்த நிறுவனத்தின் சார்பில் மாவட்டத்தில் செயல்படும் தனியார் பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல். மாணவர்கள் சேர்க்கை ஆசிரியர்கள் நியமனம் போன்ற பணிகள், தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள்,  வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், பார்வைக் குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள்.

 அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு கல்வி மற்றும் நிர்வாக மேலாண்மை தொடர்பான பயிற்சி அளித்தல், கற்போர் மையங்கள் மூலமாக எழுத்தறிவித்தல் கற்றல் துணைக் கருவிகள் மதிப்பீடு செய்தல், கல்விப் பிரிவு மையங்கள் மூலம் பயிற்சி அளித்தல்,  மாவட்ட அளவிலான கல்வி முன்னேற்றம் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை அரசுக்கு சமர்ப்பித்தல்,  மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டிற்கான மாணவர் ஆசிரியர் பிரச்னைகளை ஆராய்ச்சி செய்து அவற்றிற்கான தீர்வுகளை  அரசுக்கு அறிக்கை வாயிலாக சமர்ப்பித்தல்,  கல்வி தொலைக் காட்சி மூலமாக 1 முதல் 12 வகுப்பு மாணவர்கள் பயன்பெறச் செய்தல் போன்ற பணிகளை மாவட்ட நிறுவனம் செய்து வருகின்றது.

இது குறித்து, கல்வியாளர் அ. ஜனார்த்தனம் கூறியது: கல்வித் துறையில் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான பணிகளைச் செய்து வருகின்ற இந்த துறையில் மாநில இயக்குநர் அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலான  6 துணை இயக்குநர் பணியிடங்களும் கன்னியாகுமரி, நாகப்பட்டினம்,  தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை போன்ற மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் முதுநிலை விரிவுரையாளர்களின் பொறுப்பில் இயங்கி வருகின்றன.

 முதல்வர் மற்றும் துணை இயக்குநர் பதவிக்கு பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் முதுநிலை விரிவுரையாளர்களுக்குப் பதவி உயர்வு அளிக்காமல் அந்தந்த மாவட்ட நிறுவனங்களில் பணியாற்றும் மூத்த முதுநிலை விரிவுரையாளர்கள்  முதல்வர் பொறுப்பில் செயல்பட்டு வருகின்றார்கள். 

முதல்வர் பொறுப்பில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள் நிதி சார்ந்த பணிகளில் முழுமையாக செயல்பட இயலாமல் அச்ச உணர்வுடனே பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கல்வி சார்ந்த பணிகளிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாத நிலை ஏற்படுகிறது.

எனவே, மாநில இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள  6  துணை இயக்குநர் பணியிடங்களையும் மாவட்ட முதல்வர் பதவியினை பதவி உயர்வு மூலமாக   நியமித்திட தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றார். 

Top