logo
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கிய ரேஷன் கடைகள்

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கிய ரேஷன் கடைகள்

25/May/2021 06:53:40

ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில்  ரேஷன் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதால் பொதுமக்கள்  அரசின் கொரோனா நிவாரணத்தொகையை வாங்கிச்சென்றனர்.

தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் அனைத்து குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம்  கடந்த 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு என்ற போதிலும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் செயல்பட்டன.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1152 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 190 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் தினமும்  200 அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 24-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனால் நேற்று ரேஷன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து இன்று முதல் மீண்டும் ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. பொது மக்களுக்கு அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வினியோகிக் கப்படும்  எனவும் தெரிவித்துள்ளது. இதன்படி (மே.25 ) ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படத் தொடங்கியது.

பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து ரேஷன் கடையில் பொருட்களை வாங்கினர். அதேபோல் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை வாங்காதவர்கள் இன்று வாங்கி சென்றனர். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட  பகுதியில் இருந்தவர்கள் தனிமை காலம் முடிந்ததால் இன்று மீண்டும் வந்து நிவாரண தொகையை வாங்கி சென்றனர்.

 

Top