logo
டெங்கு பாதித்த பவானி இளைஞருக்கு தீவிர சிகிச்சை: வீடு வீடாக  சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு

டெங்கு பாதித்த பவானி இளைஞருக்கு தீவிர சிகிச்சை: வீடு வீடாக சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு

26/Nov/2020 09:57:12

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் டெங்கு காய்ச்சலை கொசுக்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகத்துடன் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் 300-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று கொசுக்கள் உற்பத்தி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். இதைப்போல் சுகாதாரத் துறையினர் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பவானியைச்  சேர்ந்த 18 வயது  இளைஞருக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அந்த இளைஞர் ஈரோடு அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த  இளைஞருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக  ஈரோடு மாவட்ட  சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:  மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். வீட்டை சுத்தமாகவும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

Top