logo
தூத்துக்குடி அருகே 100 கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகள் பறிமுதல்

தூத்துக்குடி அருகே 100 கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகள் பறிமுதல்

25/Nov/2020 07:32:37

தூத்துக்குடிக்கு தெற்கே இலங்கை அருகே இந்திய எல்லையில், இலங்கை படகின் டீசல் டேங்கில் மறைத்து வைக்கப்பட்ட 100 கிலோ ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து வந்த படகின் மூலம் நடுகடலில் இலங்கையை சேர்ந்த படகுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பிடிபட்ட இலங்கை படகில் இருந்த 6 இலங்கை நாட்டவர்களை கைது செய்துள்ள அதிகாரிகள் அவர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

அவர்களிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட  விசாரணையின்போது, ​​கராச்சியில் இருந்து ஒரு பாகிஸ்தானியர் ஒருவருக்கு சொந்தமான படகு மூலம் நடுகடலில் இலங்கை படகான “ஷெனயா துவாவில் (Shenaya Duwa) சரக்குகள் மாற்றப்பட்டதாக, கடலோர காவல்படை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இந்த படகு இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள நெகோம்போவைச் சேர்ந்த அலென்சு குட்டிகே சின்ஹா ​​தீப்தா சானி பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இந்த மருந்துகள் மேற்கத்திய நாடுகளுக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் அனுப்பப்பட கைமாறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.பிடிபட்ட படகின் செயல்படாத டீசல் டேங்க்கில் இருந்து ஒரு கிலோ எடையுள்ள 99 பாக்கெட் ஹெராயின், 20 சிறிய பெட்டிகள், செயற்கை மருந்துகள், ஐந்து 9 மிமீ கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்த ஆபரேஷனுடன் தொடர்புடைய இரண்டாவது அதிகாரி கூறினார். 


பிடிபட்ட நபர்கள் இன்று அதிகாலை தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். துப்பாக்கி, போதை மருந்து, பாகிஸ்தான் தொடர்பு, சாடிலைட் போன் , என கைப்பற்றப்பட்டுள்ளதால் கைது செய்யப்பட்ட ஆறு இலங்கை நாட்டவர்களிடமும், உளவுத் துறை, தீவிரவாத தடுப்பு , என பல துறை சார்ந்த அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 முன்னதாக இலங்கை கடலோர காவல்படையினரிடமிருந்து, இந்திய கடலோர காவல் படையினருக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் படகு ஒன்று செல்வதாக  அவர்களுக்கு செய்தி வந்ததாகவும், அதனையடுத்து அந்த படகில் சோதனை மேற்கொண்டதில் ஹெராயின், மற்றும் துப்பாக்கிகள் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top