logo
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்

25/Nov/2020 06:10:44

சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, சுகாதாரத்துறை தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது; இதனால் முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேநேரத்தில், தேவசம் போர்டு ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு, நேற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகளால், கேரள மாநிலம் சபரிமலையில், தினமும், 1,000 பேரும், சனி, ஞாயிறு தினங்களில், 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவ., 1 முதல், இதற்கான முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்தில் முடிந்து விட்டது. முன் பதிவில், தரிசனத்துக்கு அனுமதி கிடைக்காத பலரும், கார்த்திகை 1-ஆம் தேதி முதல், விரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், சபரி மலை வருமானம் குறைந்ததால் தேவசம்போர்டு, பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக,  தகவல் வெளியானது.இதனால், நவ. 23, 24-இல், கூடுதல் முன்பதிவு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில், கேரள சுகாதாரத்துறை தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. 

சுகாதாரத்துறை அனுமதி வழங்கினால் மட்டுமே, கூடுதல் பக்தர்களை அனுமதிப்பதில் அரசு முடிவு எடுக்க முடியும். இது தொடர்பான வழக்குகள் கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் போது, நிலக்கல் பரிசோதனை மையத்தில் நெருக்கடி ஏற்படும். 

பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதில் சுகாதாரத்துறைக்கு உடன்பாடு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்தில், வெள்ளை நிவேத்யம் கவுன்டரில் பணியில் இருந்த இருவருக்கு கெரோனா உறுதி ஆனது. இவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Top