logo
தில்லி, குஜராத், மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் கொரோனா நிலவர அறிக்கை: சுப்ரீம் கோர்ட் கோரியது

தில்லி, குஜராத், மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் கொரோனா நிலவர அறிக்கை: சுப்ரீம் கோர்ட் கோரியது

23/Nov/2020 06:08:13

புதுதில்லி: தில்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் அசாம் மாநிலங்களில் கொரோனா நிலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டுள்ளது.

கொரோனா தடுப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மாதங்களில் தொற்று பரவல் இன்னும் மோசமாகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.தில்லியில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமையைக் கருதி கொரோனா முன்னெச்சரிக்கை வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.பி.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்தியா முழுவதும் நடப்பு மாதத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. தில்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் அசாம் மாநிலங்கள் கொரோனா தொற்று நிலவரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடுகிறோம். கொரோனா தடுப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் டிசம்பர் மாதத்தில் தொற்று பரவல் இன்னும் மோசமாகலாம்.

கொரோனா தொற்று பரவலில் தில்லி நிலவரம் வருத்தமளிப்பதாக இருக்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, என்று நீதிபதிகள் கேட்டனர். அப்போது, மத்திய அரசு தர்ப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த நிறைய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இருப்பினும் தில்லி அரசு நிறைய சிக்கல்களுக்கு இன்னும் முறையாக விளக்க மளிக்கவில்லை என மாநில அரசை குறைகூறும் விதமாக பதிலளித்தார்.

இந்த வழக்கை நவம்பர் 27-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.தில்லியைத் தொடர்ந்து குஜராத்தில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதிகள் கேட்டனர்.


Top