logo
இரண்டாம்  மெட்ரோ ரெயில் திட்டம்: 2026-ஆம் ஆண்டு நிறைவடையும்-வில்லிவாக்கத்தில் முதல்கட்ட பணிகள் துவக்கம்

இரண்டாம் மெட்ரோ ரெயில் திட்டம்: 2026-ஆம் ஆண்டு நிறைவடையும்-வில்லிவாக்கத்தில் முதல்கட்ட பணிகள் துவக்கம்

22/Nov/2020 04:14:32

சென்னை: சென்னையில் 2-ஆவது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை வரும் 2026-ஆம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து 173 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படும் ரெயில்கள் மூலம் தினமும் 25 லட்சம் பயணிகள் பயணிக்க முடியும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2 பாதைகளில் 45 கி.மீ. தூரத்துக்கு ரெயில்களை இயக்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து 2-ஆம் கட்டமாக 3 பாதைகளில் ரெயில் போக்குவரத்துக்கான பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

சென்னையில் 2-ஆவது கட்டமாக ரூ.61,843 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, வில்லிவாக்கம் பகுதியில் நேற்று முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான விழா சென்னை, வில்லிவாக்கம், ராஜாஜி நகர், வெங்கடராகவலு தெருவில் உள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் நிலையத்தில் நேற்று நடந்தது. இதற்காக அங்கு தனியாக மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

அதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரதிப் யாதவ், சிறப்பு திட்ட செயலாக்க துறை முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்தக் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். வில்லிவாக்கத்தில் தயார் நிலையில் இருந்த பொக்லைன் இயந்திரம் சுரங்கத்துக்கான குழியை தோண்டி பணியை தொடங்கியது.

மெட்ரோ ரெயில் சிறப்புகள்: இந்நிலையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் சிறப்புகள் குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மெட்ரோ ரெயில் சேவைக்காக 2-ம் கட்டமாக அமைக்கப்படும் 3 திட்டம்ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரம் கொண்ட பாதை அமைக்கப்படுகிறது. இதில், 128 ரெயில் நிலையங்களும், மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் ரெயில்களை பராமரிக்கும் பணிமனைகளும் அமைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரம் பால்பண்ணை முதல் சிப்காட் வரை உள்ள 3-வது வழித்தடம் 45.8 கி.மீ. நீளத்தில் வடக்கு தெற்கு வழித்தடமாகும். இது தகவல் தொழில்நுட்ப வழித்தடம், அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கிறது. இந்தப்பாதையில் சுரங்கப்பாதையில் 30 ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 20 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.

சுரங்கப்பாதையில் 6 ரெயில் நிலையங்கள்: கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 4-வது வழித்தடம் 26.1 கி.மீ. நீளத்திற்கு கிழக்கு மேற்கு வழித்தடமாக அமைகிறது. நகரத்தின் வணிகப்பகுதிகளான நந்தனம், தியாகராயநகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர் மற்றும் பூந்தமல்லியை இணைக்கிறது. இதில் உயர்த்தப்பட்ட பாதையில் 18 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 12 ரெயில் நிலையங்களும் அமைகின்றன.

 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. நீளத்தில் சுற்று வட்ட வழித்தடம் அமைகிறது. வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம் மற்றும் மேடவாக்கம் ஆகியவற்றை இணைக்கிறது. இதில் உயர்த்தப்பட்ட பாதையில் 42 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 6 ரெயில் நிலையங்களும் அமையவுள்ளன. வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை உள்ள 9.051 கி.மீ. தூர விரிவாக்கப்பணிகள் அடுத்த ஆண்டு (2021) இறுதியில் போக்குவரத்துக்காக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளில் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் 2026-ஆம் ஆண்டு நிறைவடையும். அதற்கு பிறகு தற்போது உள்ள 45 கி.மீ. தூரத்தையும் சேர்த்து மொத்தம் 173 கி.மீ. தூரத்திற்கு ரெயில் இயக்கப்படும். இவற்றின் மூலம், தினமும் 25 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணிக்க முடியும். பொதுபோக்குவரத்து பயணங்களில் 25 சதவீதம் அளவில் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இது பொதுபோக்குவரத்து பயணங்களில் 25 சதவீதம் அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், முதலீடுகள் மற்றும் பொருளாதார செயல்பாடுகளுக்கு உகந்த உலகத்தரம் வாய்ந்த நகரமாக சென்னை அமையும். புறநகர் ரெயில் மற்றும் துரித போக்குவரத்து அமைப்பு, நகர பேருந்து சேவை ஆகியவற்றுடன் 21 வெவ்வேறு இடங்களில் சிரமம் இன்றி எளிதாக மாறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. மக்களின் வாழ்க்கை வசதியை மேம்படுத்துவது என்ற அரசின் முக்கிய குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

                                                   

        


Top