logo
லஞ்சத்தால் ஆபத்து: உலகின் 194 நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77 -ஆவது இடம்- லஞ்சம் குறைந்த நாடுகள் டென்மார்க், நார்வே

லஞ்சத்தால் ஆபத்து: உலகின் 194 நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77 -ஆவது இடம்- லஞ்சம் குறைந்த நாடுகள் டென்மார்க், நார்வே

21/Nov/2020 04:34:55

நியூயார்க்: உலக அளவில் 194 நாடுகளில், அரசு, தொழில்-வணிகத்தில் லஞ்சத்தால் ஏற்படும் பாதிப்பில் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா 77 வது இடத்தில் உள்ளது என்று உலகளாவிலான லஞ்ச ஒழிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அன்னாபொலிஸ் நகரிலிருந்து செயல்படும், ‘டிரேஸ்’ – லஞ்ச எதிர்ப்பு அமைப்பு (TRACE, an anti-bribery standard setting organization), ஒரு நாட்டின் அரசுடன் தொழில் உறவுகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு சேவைகளின் வெளிப்படைத்தன்மை, சமூகத்தின் மேற்பார்வை திறன், ஊடகங்களின் கண்காணிப்பு உள்ளிட்ட நான்கு காரணிகளின் அடிப்படையில், உலகிலுள்ள 194 நாடுகளில் தொழில், வணிகத்தில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டு, அந்த நாடுகள் பெறும் புள்ளிகள் அடிப்படையில் பட்டியலிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா 45 புள்ளிகள் பெற்று 77 -ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் 48 புள்ளிகள் பெற்று 78 -ஆவது இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் முன்னேறி உள்ளது. ஆனால் அதிக புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் 156 -ஆவது இடத்திலும், சீனா 126 இடத்திலும் உள்ளது. மேலும் நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையிலும் இந்தியா நல்ல நிலையில் உள்ளது.

அண்டை நாடுகளில் பூடான் மட்டுமே லஞ்சத்திற்கான புள்ளிகளில் இந்தியாவை விட குறைவான அளவாக 37 புள்ளிகள் பெற்று 48 வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு தரவுகள்படி, வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தெற்குசூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகிய நாடுகள் தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ள நாடுகளாக, 194 நாடுகள் பட்டியலில் 190 -க்கு மேல் இடம்பெற்றுள்ளன. 


Top