logo
மத்திய அரசின் அறிவிப்பில் பசிக்கு பதில் இல்லை: ப.சிதம்பரம்.

மத்திய அரசின் அறிவிப்பில் பசிக்கு பதில் இல்லை: ப.சிதம்பரம்.

14/May/2020 12:13:51

ஊரடங்கால் பாதிக்கப்பட்டு பசியில் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பில் பதில் ஏதும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார சிறப்பு திட்டங்கள் குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். 

  அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பலன் அடையும் என அறிவிக்கப்பட்டன.

  இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் கூறியதாவது:

  நாடு முழுவதும் பசி மற்றும் ஏழ்மையில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு நிதியமைச்சரின் பேச்சில் எதுவும் இல்லை.

  பேரழிவுகளுக்கு உள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சென்றனர். பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் நிதியமைச்சரின் பேச்சில் எதுவும் இல்லை. தினம் தினம் உழைப்பவர்களுக்கு இது ஒரு மரண அடியாகும்.

அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்கு பணத்தை கொண்டு சேர்க்க எந்த வழிகளும் உருவாக்கப்படவில்லை. 13 கோடி குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவுகாக சில நடவடிக்கைகளை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த ஆதரவு நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேற்கொள்ளும் சுமார் 45 லட்சம் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும்.     

  ஆனால், இது தவிர பெருமளவிலான மொத்தம் 6.3 கோடி எண்ணிக்கையை கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கைவிடப்பட்டு தளர்வடைந்து விடும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Top