logo
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு இன்று முதல் பக்தர்கள் அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு இன்று முதல் பக்தர்கள் அனுமதி

16/Nov/2020 04:29:45

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதையொட்டி கேரளாவில் இருந்து மட்டுமின்றி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் இன்று கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2021 ஜனவரி 14-ஆம் தேதியும் நடக்கிறது. இதற்காக 15.11.2020  கோயில் நடை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். இன்று அதிகாலை 5 மணிக்கு, புதிய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

அத்துடன் தினசரி வழக்கமான அனைத்து பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெறுகிறது. தினசரி பூஜை இடைவேளைக்காக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்னர் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்து கொள்ள வேண்டும். தினசரி 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பக்தர்களும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். 10 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். தனி மனித இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். மட்டுமின்றி சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு, வடசேரிக்கரை-பம்பை, எருமேலி-பம்பை ஆகிய இரு வழிகளில் மட்டுமே பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன.


Top