logo
நீரிழிவு நோய் தினம்.. சிக்கல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: டாக்டர் வி.மோகன்

நீரிழிவு நோய் தினம்.. சிக்கல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: டாக்டர் வி.மோகன்

13/Nov/2020 08:25:59

சென்னை: நவம்பர் 14-ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினம். இது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

25 ஆண்டுகளில் (2045) நீரிழிவு நோயாளி எண்ணிக்கை 13 கோடியே 40 லட்சமாக உயர உள்ளது. நீரிழிவு நோய் கட்டுக்குள் இருந்தால் பிரச்சினை இருக்காது. ஆனால் பாதிப்பு அதிகமாக இருந்தால் சிக்கலான பிரச்னைகளை உருவாக்கி சிறுநீரக பாதிப்பு, சிறு நீரகம் பாதிப்பு, கண் பார்வை, இருதயம், பாதம் புண்ணாகுதல் போன்ற இழப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 

நீரிழிவு நோய் சிக்கல்களை மொத்தமாக தடுக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக, நீண்ட காலம் வாழ முடியும். ஆம், நிச்சயமாக இதை செயல்படுத்த முடியும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டால் சிக்கல்களை வெல்ல முடியும் என்று டாக்டர் வி.மோகன் சிறப்பு நீரிழிவு மையம் மற்றும் இதன் ஆராய்ச்சி நிறுவனம் தலைவருமான டாக்டர் வி.மோகன்.

இவர் வெளியிட்ட உலக நீரிழிவு தின செய்தியில் கூறியதாவது: நீரிழிவு நோயாளிகள் ABCD திட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். A. 3 மாத சராசரி ரத்தத்தில் சர்க்கரை அளவை 7% அளவுக்கு குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். B. ரத்த அழுத்தம் 140/90 -க்கு குறைவாக இருக்க வேண்டும். C. கொலஸ்ட்ரால், எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை நார்மல் அளவில் வைக்க வேண்டும்.

D. ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் விலக்குதல், புகைப்பிடித்தல், புகையிலை உட்கொள்ளுதலை விலக்க வேண்டும். இந்த ABCD திட்டத்தை நீரிழிவு நோய் கொண்ட ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால், வருங்காலத்தில் நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களை தடுக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கண், சிறு நீரகம், நரம்பு மண்டலம் சிறு ரத்தக் குழாய்களும், இருதயம், மூளை, கால்களில் பெரிய ரத்த குழாய்களும் பாதிக்கப்படுகிறது. இதை தடுத்துவிட்டால், அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு எந்த சிக்கலான பாதிப்பும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளை காக்க முடியும்.

உலக நீரிழிவு தினத்தில் எனது கனவான நீரிழிவு நோய் சிக்கல் இல்லாத இந்தியா நிறைவேறுவது வெகு தொலைவில் இல்லை. இதற்கு அனைத்து மருத்துவர்களும் நீரிழிவு நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் ஒத்துழைக்க வேண்டும். ஆண்டுக்கு 4 முறையாவது ரத்தத்தில் சர்க்கரை அளவை எடுக்க வேண்டும். இதன் மூலம் எனது கனவு நிறைவேறும் இவ்வாறு டாக்டர் மோகன் கூறினார்.


Top