logo
புதுகையில் தகவல்களை தாங்கி நிற்கும் சுற்றுச் சுவர்கள், பாதுகாக்க வலியுறுத்தல்

புதுகையில் தகவல்களை தாங்கி நிற்கும் சுற்றுச் சுவர்கள், பாதுகாக்க வலியுறுத்தல்

11/Nov/2020 09:09:28

புதுக்கோட்டை:  இது குறித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின்  வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியரும், வாசகர் பேரவைச் செயலருமான சா. விஸ்வநாதன் வெளியிட்ட தகவல்:

தகவல் களஞ்சியமாக உருமாறிய சுற்றுச் சுவர், சுற்றுச்சுவரா  தகவல் களஞ்சியமா, புதுகையில் ஒரு புரட்சிப் பயணம் தொடக்கம்.. இதெல்லாம் மாற்றம் கண்ட புதுக்கோட்டை மன்னர் கல்லூரி சுற்றுச்சு வரைப்பற்றி 2016 -ஆம் ஆண்டில் தினமணி, தினமலரில் வந்த செய்திகள்.

இதைப் பார்த்த அன்றைய துணை ஆட்சியர் இத்தகவல்கள் சேதப்படுத்தப்படாமல் அனைவரின் பார்வைக்கும் வர வேண்டும் என்ற நோக்கில், பிரஹதம்பாள் பள்ளியிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை உள்ள பகுதிகள் பொருள் வியாபாரம் செய்வதற்குரிய பகுதி இல்லை என்று அறிவித்து சாலையோரக் கடைகளையெல்லாம் அப்புறப்படுத்தினார். அதற்குப் பின்  மாவட்ட ஆட்சியரால், கடைகள் பல முறை அகற்றப்பட்டும் நிலைமை மாறவில்லை.

அது ஒரு புறமிருக்க,  இந்த தகவல்கள். சமூக ஆர்வலர்கள், நல்ல உள்ளம் படைத்த ஒப்பந்தக்காரர்கள், மன்னர் கல்லூரி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் இவர்களின் பெரும் முயற்சியால் லட்சக்கணக்கில் செலவிட்டு எழுதப்பட்டது. சுவற்றைப் பார்த்தால் எதிரே உள்ள மன்னர் கல்லூரியில் என்னென்ன பாடங்கள் போதிக்கப்படுகிறது என்று தெரியும். தற்சமயம் அவைகளை மறைத்து சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. சுவரொட்டிகள் நம் புதுகை நகரின் அழகை பாழாகிக் கொண்டிருக்கிறது. புதுகை நகராட்சியின் நூற்றாண்டை ஒட்டி வரையப்பட்ட ஓவியங்கள் கூட சுவரொட்டிகளால் பாழாகிவிட்டது.

பிரஹதம்பாள் பள்ளி சுற்றுச் சுவரில் எழுதப்பட்டதும் அப்படியே. சுவரொட்டி ஒட்டுகிறவர்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது. ஏனென்றால் போதையோடுதான் ஒட்ட வருகிறார்கள். ஆனால் ஒட்டச் சொல்பவர்கள் விவரம் அறிந்தவர்களே.

அன்பிற்கினிய அரசியல் கட்சி தொண்டர்களே, விளம்பரதாரர்களே, அச்சக உரிமையாளர்களே உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இனியாவது மன்னர் கல்லூரி சுற்றுச்சுவரின் எந்த பகுதியிலும் சுவரொட்டிகளை ஒட்டச் சொல்லாதீர்கள். மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாசகங்களை பாழாக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Top