logo
வருவாய்த்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப்பின் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு

வருவாய்த்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப்பின் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு

04/Nov/2020 09:12:30

சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து  மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று 4.11.2020 தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அரசு செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து துணை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட அரசு உயர்மட்ட குழு பேச்சுவார்த்தையில், வருவாய்த் துறை அலுவலர்களின் 12 அம்ச  கோரிக்கைகள் குறித்து சுமார் ஒன்றரை மணி நேரம் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையின் இறுதியில் வருவாய்த்துறை அமைச்சர் கொரோனா பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான நிவாரண தொகை வழங்குவதற்கான அரசாணையை இரு தினங்களில் வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்கள்.

மேலும், அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு  மேம்படுத்தப்பட்ட ஊதியம்,  கருணை அடிப்படையில் நியமனம் பணிவரன்முறை அரசாணை, இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் விதி திருத்தம்,  ஜாக்டோ-ஜியோ பாதிப்புகள் உள்ளிட்ட கோரிக்கைகளை  நிதித்துறையோடு ஆலோசனை செய்து குறுகிய கால அவகாசத்தில் ஆணைகள் வழங்குவதாக வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் உறுதி எடுத்துள்ளார்கள்.

 தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட விரிவான பேச்சுவார்த்தையில் நமது கோரிக்கைகள் குறித்து மிக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே நம்பிக்கை மற்றும் நல்லெண்ண அடிப்படையில் கோரிக்கைகளை விரைவில் வென்றெடுக்கும் விதமாக,  நாளைய காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

நாளைய போராட்டத்திற்கும், பிரசார இயக்கத்திற்கும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும், வட்டக்கிளை நிர்வாகிகளுக்கும், முன்னணி ஊழியர்களுக்கும் வருவாய்த்துறையை சேர்ந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மாநில மையத்தின் சார்பில் வீரம்செறிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். கோரிக்கைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான சுற்றறிக்கை தனியே அனுப்பி வைக்கப்படும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Top