logo
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு  காலமானார்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

01/Nov/2020 08:03:51

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு(72)  நேற்றிரவு  சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்தார்.

மூச்சுத்திணறல் காரணமாக அக்டோபர் 13- ஆம்  சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கணணுவுக்கு 90 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை கூறியிருந்தது .உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். வேளாண் துறையில் முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றிவந்தவர் அமைச்சர் . துரைக்கண்ணுவின் மறைவு அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என ஆளுநர் இரங்கல் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். 

இதைப் போல, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட இரங்கல் செய்தி:  தமிழக வேளாண்துறை அமைச்சர் .துரைக்கண்ணு அவர்களின் மறைவுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், அதிமுகவினருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் ஆகியோரும் இரங்கல்களைத்  தெரிவித்துள்ளனர். 

வாழ்க்கைக்குறிப்பு: வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு 1948 -ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் பிறந்தார். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ. படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க வில் சேர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும் மாவட்ட வேளாண் விற்பனை தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.அமைச்சர் துரைக்கண்ணு.2006, 2011, 2016 என மூன்று முறை தொடர்ந்து அதிமுக சார்பில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். 2016-ஆம் ஆண்டு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழக வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்

தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும் இரண்டு மகன்கள், நான்கு மகள்களும் உள்ளனர். மூத்த மகன் சிவ பாண்டியன் வேளாண் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் ஐய்யப்பன் என்கிற சண்முகபிரபு அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக உள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணச்செய்தியறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, காவேரி மருத்துவமனைக்குத் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு.அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட தமிழக அரசு உத்தரவு.


Top