logo
உற்பத்தி நிறுவனங்கள், மொத்த,சில்லரை விற்பனையகங்கள், சேமிப்பு கிடங்குகள் முன்னறிவிப்புமின்றி ஆய்வு

உற்பத்தி நிறுவனங்கள், மொத்த,சில்லரை விற்பனையகங்கள், சேமிப்பு கிடங்குகள் முன்னறிவிப்புமின்றி ஆய்வு

31/Oct/2020 10:57:07

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனையகங்கள், சேமிப்பு கிடங்குகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆய்வு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

மின்சார வயர்கள், கேபிள்கள், சாதனங்கள், பாதுகாப்புக் கருவிகள் தரக்கட்டுப்பாட்டு சட்டம்- 2003 மற்றும் எண்ணெய் அழுத்த தரக்கட்டுப்பாட்டு சட்டம்- 1997 ஆகியவற்றை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தும் அலுவலர்களாக 14.8.2020 முதல் அந்தந்த மாவட்ட தொழில் மைய மேலாளர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லரை விற்பனையகங்கள், சேமிப்பு கிடங்குகள் ஆகியவை எவ்வித முன்னறிவிப்புமின்றி மாவட்ட தொழில் மைய அலுவலர்களால் ஆய்வு செய்யப்படும். ஆய்வின் போது உற்பத்தியாளர்களிடமிருந்து மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பவும், நிர்ணயிக்கப்பட்ட தர அளவின்படி இல்லாத மின்சாதனப் பொருட்கள் மற்றும் எண்ணெய் அழுத்த அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்யவும் உற்பத்தியாளர்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் மேற்கொள்வதற்கும் புதுக்கோட்டை மாவட்ட தொழில் மைய மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பான நிறுவனங்கள் இந்திய தரக்கட்டுப்பாட்டு முத்திரை பெற்ற பொருட்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.


Top