04/Sep/2021 12:39:12
ஈரோடு, செப்: கரூர் மாவட்டம், நியூ தமிழ் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் ( 52). இவர் கரூரில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ராமலிங்கம் ஈரோட்டில் நாராயண வலசு ,திருவிக நகர் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு ரூம் எடுத்து வாரத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பணம் வசூலில் ஈடுபட்டுவந்தார்.
நேற்று இரவு ராமலிங்கம் ஈரோட்டில் உள்ள தான் தங்கியிருக்கும் ரூமின் இரண்டாவது மாடி வாசலில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வழுக்கி, ராமலிங்கம் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ராமலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து நிதி நிறுவன அதிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.