22/Aug/2021 10:40:52
ஈரோடு, ஆக: ஈரோடு அருகே கீழ் பவானி கால்வாயில் கசிவு நீர் பகுதியில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பாசனத்திற்க்காக திறக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் விவசாய விளை நிலங்கள் மற்றும் வீடுகளுக்கும் புகுந்துள்ளன.இந்த நிலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியினை பெருந்துறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணபணிக்களை துரிதப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. 200 கிமீ நீளம் கொண்ட இந்த கால்வாயை சீரமைக்க கடந்த பிப்ரவரி மாதம் 710 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன..
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியவிலாமலை ஊராட்சி, கண்ணவேலம்பாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி கால்வாயில் கசிவு ஏற்பட்டது. முதலில் சிறிய அளவில் இருந்த விரிசல் இன்று காலையில் முற்றிலுமாக பெரிதாகி கான்கிரீட் தளம் உடைப்பு ஏற்பட்டு பாசனத்துக்கு திறக்கப்பட்ட பல ஆயிரம் கன அடி தண்ணீர் விவசாய பகுதிகளுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் புகுந்து சேதமடைந்தன.
இதன் காரணமாக தண்ணீர் முள்ளம்பட்டி ஊராட்சி வரவங்காடு, காரைக்காடு, மலைப்பாளையம், பகுதிகளில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் புகுந்தது.இதனால் இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.மேலும் தொழுவத்தில் இருந்த ஆடு, மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. நெல்,கரும்பு, மஞ்சள், வாழை பயிரிட்டிருந்த விளை நிலங்களில் பயிர்களும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட போதிலும், கால்வாயில் இருந்த தண்ணீர் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக பெருக்கெடுத்து இப்பகுதியில் புகுந்தது. இதுவரை மொத்தம் 64 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும், வெள்ளம் வடிந்த பிறகே முழுமையான சேத விவரங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார். தண்ணீர் சூழ்ந்த பகுதிக்குள் நடந்து சென்று அங்கிருந்த பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் உடனடியாக அவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் உணவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். விரைவில் நிவாரண உதவிகளும் வழங்குவதாகவும் உறுதி கூறினார்.
மேலும் விவசாய விளை நிலங்கள் மட்டுமல்லாது பொது மக்களுக்கும் தேவையான இழப்பீடுகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கபட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டு வருகின்றன.
சட்டமன்ற உறுப்பினரோடு பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி ஜெயராஜ், வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் விஜயன் என்கிற ராமசாமி, முள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி குழந்தைசாமி.
பெரியவிலாமலை ஊராட்சி மன்ற தலைவர் பூவிழி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஓ.ஆர். பழனிச்சாமி, அப்புசாமி, ரஞ்சித் ராஜ் ( எ) வைகை தம்பி,கேபிஎஸ் மணி, ஹிட்டாச்சி பாலு, கருப்பட்டி சங்க துணைத் தலைவர் ராஜேந்திரன், பெத்தாம்பாளையம் கோபால், காடபாளையம் கோபால், டைலர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.