logo
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரிக் கொள்கையே காரணம்: ப.சிதம்பரம் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரிக் கொள்கையே காரணம்: ப.சிதம்பரம் கண்டனம்

26/Jun/2021 06:33:12

புதுதில்லி: உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என்றும் இன்றைய நிலைக்கும் அரசின் வரிக் கொள்கை அல்ல வரிக் கொள்ளை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பசிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை பெட்ரோல் விலை ரூ.99 - தாண்டி உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.99.19 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரிக்கப்பட்டு டீசல் ஒரு லிட்டர் ரூ.93,23 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில்12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100- தாண்டி உள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் .சிதம்பரம், தனது சுட்டுரை பதிவில், உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 - தாண்டியது. கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது. ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 - தாண்டவில்லை. இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை,

இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது. மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள்தோறும் அனுபவிக்கிறார்கள் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

Top