logo
மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்:பி.ஆர்.பாண்டியன்

மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்:பி.ஆர்.பாண்டியன்

13/Jun/2021 05:34:13

புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்றார் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்

 புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள கரு-வடதெருவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து போராடிய விவசாயிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னரும், புதுச்சேரி தொடங்கி ராமநாதபுரம் வரையிலும், டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல்எரிவாயு, கச்சா எண்ணெய் எடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு மத்திய அரசு தொடர்ந்து ஒப்பந்தபப்புள்ளி கோரி வருகிறது. தமிழக அரசின் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் கோரப்படும் ஒப்பந்தங்கள் செல்லாது என கடந்த கால ஆட்சியில் விளக்கமளிக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும் நெடுவாசலில் நடைபெற்ற ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு  போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். எனவே, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.ஜூன்.17-ம் தேதி பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாதுகாக்கும் வகையில் அவசர சட்டத்தை நிறைவேற்ற பிரதமரை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு திட்டத்தை உடனே ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Top