logo
   புதுகை நகரின் மத்தியில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்கச்செய்ய எம்எல்ஏ-  முத்துராஜா தீவிர முயற்சி

புதுகை நகரின் மத்தியில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்கச்செய்ய எம்எல்ஏ- முத்துராஜா தீவிர முயற்சி

10/Jun/2021 08:13:34

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை நகரின மத்தியில் நூற்றாண்டை கடந்த பெருமையுள்ள டாக்டர் முத்துலட்சுமி நினைவு அரசு தலைமை மருத்துவமனையை அதே இடத்தில் மீண்டும் இயங்கச்செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் தொடர் கோரிக்கையை நிறைவேற்ற புதுகை எம்எல்ஏ-டாக்டர் வை. முத்துராஜா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் காலத்தில்   1851-ல் புதுக்கோட்டை நகரில்  தொடங்கப்பட்ட இந்த அரசு தலைமை மருத்துவமனைக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது  பெயரை தமிழக அரசு சூட்டியதுமாவட்ட  அரசு தலைமை மருத்துவமனையை நம்பியே மாவட்ட மக்கள் உள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பலகோடி செலவில்  பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. அரசின் காப்பீடுத்திட்டம் உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தனசிகிச்சை, நிர்வாகம்ஆய்வகம், அறுவைச்சிகிச்சை அரங்கு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் பல கோடி செலவில் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து   இம்மருத்துவமனைக்கு  தேசிய தரச்சான்றிதழ்  வழங்க வேண்டுமென  மாவட்ட சுகாதாரத்துறை மூலம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து   தேசிய மருத்துவத்தரச்சான்று(NABH) பெறுவதற்கான விதிமுறைகளின் படி, தேவையான  கட்டடங்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு இந்த மருத்துவ மனையில் நிறைவேற்றியது. கடந்த 2015 -இல் மத்தியக் குழுவினர் (QCI)    ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த  2017 ஜூன் 9-இல் புதுகை தஞ்சை சாலையில் முள்ளூர் அருகே 127 ஏக்கர் பரப்பளவில் ரூ229 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகரில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை ராணியார் மகப்பேறு மருத்துவமனை ஆகியவை இங்கிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிரமமின்றி  சிகிச்சைக்காக புதுக்கோட்டை நகரின் மத்தியில் இருந்த மருத்துவமனைக்கு வந்து சென்ற மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக வடக்கு ராஜவீதியருகே இருந்து ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து பரவலான மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ஏற்கெனவே இருந்த இடத்துக்கு மகப்பேறு மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அரசு தலைமை மருத்துவமனை மாற்றப்படவில்லை.  இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்குப்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுப்பப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் தொடங்குவது  தொடர்பாக  சட்டமன்ற  உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா சில நாள்களுக்கு முன்  அதிகாரிகளுடன் ஆய்வு  மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை வளாகத்தில்   தூய்மை பணிகளையும்  தேவையான அனைத்து பணிகளும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


வரும் ஜுலை 15 -இல்  இந்த மருத்துவமனை மீண்டும் திறந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும் எம்எல்ஏ- முத்துராஜா தெரிவித்தார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையர்(பொ) ஜீவா சுப்பிரமணியம், மாவட்ட திமுக பொருளாளர் .செந்தில், நகரச் செயலாளர் . நைனா முகமது  மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து  சென்னைக்குச்சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .டாக்டர் வை.முத்துராஜா (10/06/2021) வியாழக்கிழமை  தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து புதுக்கோட்டை முத்துலட்சுமி அம்மையார் நினைவு அரசு  மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி மனு அளித்தார்அப்போது  வரும் 13 அல்லது 14-ஆம் தேதியில் புதுக்கோட்டைக்கு நேரில் வந்து  பார்வையிடுவதாக  எம்எல்ஏ- முத்துராஜாவிடம்   அமைச்சர்   தெரிவித்தார்.

இதைப் போல, தமிழ்நாடு  மருத்துவம் மற்றும் நலப்பணிகள்  இயக்குனர் டாக்டர்  குருநாதனையும்  நேரில்   சந்தித்துபுதுக்கோட்டை  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார்.

                                                  

        

Top