logo

ஈரோட்டில் முழு ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 1100 வாகனங்கள் பறிமுதல்

02/Jun/2021 01:28:12

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  முழு ஊரடங்கை மீறிய வெளியே சுற்றித்திரிந்ததாக  ஒரே நாளில் 1100 வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டு  அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்திருந்தார்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச் சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்இருப்பினும் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து வாகன ஓட்டிகள் வெளியே சுற்றி வருவதால் இதனை தடுக்கும் வகையில் ஈரோடு போலீசார் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் இன்னும் சில வாகன ஓட்டிகள் இதைப்பற்றி கவலைப் படாமல் வெளியே சர்வசாதாரணமாக சுற்றி வருகின்றனர்.

ரடங்கின் 9-ஆவது நாளான  செவ்வாய்க்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 1055 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 1072 இருசக்கரவாகனங்களும், 28 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் மட்டும் ரூ.5.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Top