logo
 ஒளிரும் ஈரோடு தொண்டு நிறுவனத்தின் கொரோனா சிகிச்சை மையத்துக்கு ரூ.20 லட்சத்தில் ஆக்சிஜன் செரிவூட்டி

ஒளிரும் ஈரோடு தொண்டு நிறுவனத்தின் கொரோனா சிகிச்சை மையத்துக்கு ரூ.20 லட்சத்தில் ஆக்சிஜன் செரிவூட்டி

23/May/2021 05:02:31

ஈரோடு, மே:  ஒளிரும் ஈரோடுதொண்டு நிறுவனம் சார்பில்  தொடங்கப்பட்டுள்ள கொரோனா இலவச சிகிச்சை மையத்துக்கு ஆப்பிரிக்க கட்டுமான நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செரிவூட்டி இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

 ஈரோடு நகரில் கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒளிரும் ஈரோடு பொதுநல அமைப்பு மற்றும் கிறிஸ்து ஜோதி மருத்துவமனை இணைந்து ஈரோடு மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கொரோனா   சிகிச்சை மையம் தொடங்கியுள்ளன.

கொரோனா நோய்தொற்றின்   தொடக்க  நிலை  மற்றும்  நடுத்தர  நிலை பாதிப்பில்  உள்ள நோயாளிகளுக்கு  அரசு அனுமதியுடன் இங்கு  இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. 40 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட இந்த மையம், தற்போது 150 படுக்கைகள் கொண்ட சிறப்பு இலவச  கொரோனா   சிகிச்சை  மையமாக  மாற்றப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உணவு, தங்குமிடம், மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஒளிரும்    ஈரோடு அமைப்பின்  மூலம் 12 மருத்துவர்கள், 20 செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள் பணியமர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

இந்நிலையில், இங்கு சிகிச்சையில் உள்ள கொரோனா    நோயாளிகளின்  ஆக்சிஜன்  தேவையைப் பூர்த்தி   செய்வதற்காக, டெக்ஸ்வேலி நிறுவனத்தின் மூலமாக முயற்சி எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜவுளிப்பூங்காக்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான அரைஸ் ஐஐபி நிறுவனம், ரூ 20 லட்சம் மதிப்பில், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியை அளிக்க, தலா 10 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய,  10 ஆக்சிஜன் செரிவூட்டி களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த அரைஸ் ஐஐபி நிறுவன முதன்மை செயல் அதிகாரி ககன் குப்தா கூறியதாவது: ஈரோட்டைச்    சேர்ந்த   கொரோனாவால்  பாதிக்கப்பட்ட   நோயாளிகளுக்கு நாங்கள்  வழங்கும்  ஆக்சிஜன்செரிவூட்டிகள் உயிர் காக்க உதவியாக இருக்கும். கரோனா தொற்றால் இந்தியா சோதனையான காலகட்டத்தில் இருக்கும் நிலையில், ஜவுளித்துறை சார்ந்தவர்களுக்கு இந்த உதவியை செய்வதில்   மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

 

டெக்ஸ்வேலி துணைத்தலைவர் யு.ஆர்.சி.தேவராஜன் கூறும்போது, கொரோனா  தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசுடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்கா நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான அரைஸ் ஐஐபி நிறுவனம், ஆக்சிஜன் செரிவூட்டிகளை வழங்கியுள்ளது. இக்கட்டான இந்த காலகட்டத்தில், இதே போன்று, பல்வேறு  உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெறுவதற்கு ஒளிரும் ஈரோடு மற்றும் டெக்ஸ்வேலி நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது  என்றார்.

 

 

                                                                              

        

Top