23/May/2021 01:01:17
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டையில் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் சமூக இடைவெளியை கேள்விக்குறியானது.
தளர்வுகளில்லாத முழு முடக்கம் திங்கள்கிழமை(மே.24) முதல் தமிழகம் முழுவதும் அமலாவதையொட்டி முதல்
நாளான வெள்ளி, சனிக்கிழமை 2 நாள்களுக்கு அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கலாம் என அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து புதுக்கோட்டையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை தெற்கு ராஜவீதி, உழவர் சந்தை வீதி, பூ மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் வாங்குவதற்காக சமூக இடைவெளியைப் கடைப்பிடிக்காமல் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
அதேபோன்று கடைக்காரர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை இல்லாமலும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை கவனித்த காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும் எவ்விச பலனுமில்லை. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். முழுமுடக்கத்தைப் பயன்படுத்தி காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறைந்த பயணிகளே அதில் பயணம் செய்து வருகின்றனர்.
பொதுமக்களின் இந்த அலட்சியப் போக்கால்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மூன்று இலக்கத்திலிருந்து
நான்கு இலக்கத்துக்கு உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை
தெரிவிக்கின்றனர்.