logo
கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வீடுகளுக்கே சென்று பரிசோதனை:அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வீடுகளுக்கே சென்று பரிசோதனை:அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

22/May/2021 07:56:49

புதுக்கோட்டை:கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கிராம பகுதிகளில் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் கலீப்நகர், கறம்பக்காடு, குளமங்கலம் தெற்கு, ஆயிங்குடி, கொடிவயல், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியது:
   புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்  அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு,  அரசு மருத்துவமனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில், கிராமப்புறங்களில் உள்ள கரோனா தொற்றாளர்களை கண்டறிந்து,  அவர்களுக்கு  உரிய சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை  வழங்கப்பட்டுள்ளது. இதில், சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 2 மருத்துவர்கள், 4 செவிலியர்களை தற்காலிக பணியாளர்களாக நியமிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
       இப்பகுதியில் பாதிப்புக்கு உள்ளானவர்களின்  மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனை அல்லது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் சுப்பிரமணியபுரத்தில் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தொற்று அதிகமுள்ள ஊராட்சிகளை  கண்டறிந்து வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தன்னார்வலர்களுடன் இணைந்து வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதனால், கிராமபுறங்களில் கொரோனா பரவல் தடுக்கப்படும் என்றார்.
   ஆய்வின்போது, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன்,  மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top