logo
விராலிமலை-இலுப்பூர்-அன்னவாசல் மருத்துவமனைகளில் அமைச்சர் ரகுபதி, கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் ஆய்வு

விராலிமலை-இலுப்பூர்-அன்னவாசல் மருத்துவமனைகளில் அமைச்சர் ரகுபதி, கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் ஆய்வு

21/May/2021 10:20:17

புதுக்கோட்டை, மே:  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-இலுப்பூர்-அன்னவாசல் மருத்துவமனைகளில் தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், தென்னலூர் எம்.பழனியப்பன் ஆகியோருடன்  நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் எஸ். ரகுபதி கூறியதாவது:

 தமிழக முதல்வரின்  அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதில், விராமலை தொகுதியிலுள்ள அன்னவாசல், இலுப்பூர்  மற்றும் விராலிமலை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளின் கோவிட் சிகிச்சைப் பிரிவுகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.


விராலிமலை அரசு மருத்துவமனையினை பொருத்தவரையில் 30 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு 3 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். கூடுதலாக 3 மருத்துவர்கள் உடனடியாக தற்போது பணியமர்த்தப்படுகின்றனர். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 30 கொரோனா நோயாளிகள் இங்கு ஆக்ஸிஜன் வசதியுடன் சிகிச்சை பெற முடியும். இதனால் அருகில் உள்ள மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கோவிட் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும்.

இலுப்பூர்  மருத்துவமனையில் கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 45 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்பொழுது  சிகிச்சை பெற்று வரும் 7 கோவிட் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அரசு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சைகள் கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் அரசு மருத்துவமனைகளில் 3 வேளையும் உணவு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ரகுபதி.

இந்த ஆய்வில், போது இணை இயக்குநர்(ஊரக நலப்பணிகள்) இராமு உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top