29/Sep/2020 04:38:46
ஈரோடு: ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே மல்லியூரில் காதல் திருமணம் செய்து 3 மாதங்களே ஆன தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பக்கூடல் அருகே மல்லியூரிரைச் சேர்ந்தவர் இளங்கோ(23). மெக்கானிக்கல் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரம்யா(23).இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று(செப்.29) காலையில் வெகு நேரமாகியும் இளங்கோ வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அருகிலிருந்தவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்கிட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவலறிந்த ஆப்பக்கூடல் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளங்கோ, ரம்யா ஆகியோரது சடலங்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தகறாரில் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.