25/Apr/2021 10:38:41
ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 300 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை
கடந்துள்ளது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கின்
போது மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகள் மற்றும் 34 முக்கிய இடங்களில்
போலீசார் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு முழுவதும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் விதிமுறைகளை மீறி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடமாடுவோர், கடையை திறந்து வைத்திருந்த உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இரவு நேர ஊரடங்கின் முதல் நாளில் ஈரோடு மாவட்டத்தில் 50 வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2-ம் நாள் ஊரடங்கில் 75 வழக்கங்களும், மூன்றாம் நாள் ஊரடங்கில் விதிமுறைகளை மீறியதாக 100 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு 4-வது நாளாக ஊரடங்கு மீறியதாக மாவட்டம் முழுவதும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 4 நாட்களாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.