logo
 கொரோனா தொற்றிலிருந்து   குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை 96 சதவீதமாக உள்ளது: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை 96 சதவீதமாக உள்ளது: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

24/Apr/2021 05:34:19

புதுக்கோட்டை, ஏப்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு  குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை  96 சதவீதமாக உள்ளது என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில்  கொரோனா  நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும்  ஆக்ஸிஜன் கையிருப்பு போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் சனிக்கிழமை நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 பின்னர்  மாவட்ட ஆட்சியர் மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை  2 இலக்கத்திலிருந்து 3 இலக்கமாக அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை, கொரோனா தடுப்பூசி  போடுதல், போதிய படுக்கை வசதி போன்ற ஏற்பாடுகளையும் தங்குதடையின்றி மேற்கொள்ளப்படுகிறது..

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 654 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தினமும் ஒரு ஒன்றியத்திற்கு 6 காய்ச்சல் முகாம் வீதம் 78 காய்ச்சல் முகாம்கள் உள்ளாட்சி அமைப்புகள் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.

தினமும் 2,000 ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிகுறிகளுடன் வரும் புறநோயாளிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் முடிவுகளை 24 மணிநேரத்தில்  தெரிவிக்கும் வகையில் 24 மணிநேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் 04322-222207 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்தல், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அச்சத்தை போக்குதல், மனநல ஆலோசனை வழங்குதல், கொரோனா உறுதியானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 பரிசோதனையின் அடிப்படையில்  கொரோனா  அறிகுறி இல்லாத மற்றும் இணைநோய் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு ஆரம்ப கட்ட பரிசோதனைக்குப் பின் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு  இருக்க அனுமதிக்கப்படு வார்கள். சிம்டமேடிக் அறிகுறி உள்ள நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா ஒப்புயுர்வு சிகிச்சை மையத்திலும் அனுமதிக்கப்படுகின்றனர்இங்கு ஐசியு+ படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்  சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீட்டிற்கு செல்பவா;கள் 96 சதவீதமாக உள்ளது:

பொது மக்கள்  கொரோனா  அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனைக்குபின் 24 மணிநேரம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை வரவும் அறிவுறுத்தப்படுகிறது.

லேசான அறிகுறி உள்ளவர்கள் தங்களது வீடுகளில் தனி அறை மற்றும் தனி கழிவறை இருப்பின் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா  தொற்றை தடுக்கும் வகையில் பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிதல்,

சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தவறாது பின்பற்ற வேண்டும். இதே போன்று திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு வரும் பொது மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், ஆக்ஸிஜன் இருப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஏற்கெனவே இங்கு ஒரு 6KL ஆக்ஸிஜன் டேங் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கூடுதலாக 6KL ஆக்ஸிஜன் டேங் ஏற்படுத்தப்பட்டு தற்பொழுது 12KL ஆக்ஸிஜன் டேங் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும்  12KL ஆக்ஸிஜன் சிலிண்டா;கள் நிரப்பப்பட்டு வருகிறது.


இதுதவிர அரசு மருத்துவமனைகளில் 359 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் கையிருப்பில் உள்ளது. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 512 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போதிய அளவு கையிருப்பில் உள்ளது.

மாவட்டத்தில் சிம்டமேடிக் அறிகுறிகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதுக்கோட்டை அரசு  பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள்  விடுதியில் 100 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டர் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதே போன்று அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையமும், வாக்கு எண்ணிக்கை முடிவுற்றவுடன் திறக்கப்படும்.

 மேலும் அறந்தாங்கி தொழிற்பயிற்சி நிலையம், குடுமியான்மலை ஸ்டாமின் மையத்திலும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவிட் சிகிச்சை மையம் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் (ஏப்.25)ஞாயிறு அன்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் பொது மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம்.விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 9 சோதனைச்சாவடிகள்: அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதுடன் காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறை போன்ற துறை அலுவலர்கள் மூலம் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

 

பின்னர்  சட்டமன்ற தோ;தல் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அரசு அலுவலர்கள், முகவர்களுக்கான தடுப்பூசி  முகாம் நடைபெறும் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வில், மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) கலைவாணி, மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் ராஜ்மோகன் நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

 

Top