logo
விஸ்வரூபம் எடுக்கும்  ஆக்ஸிஜன் விவகாரம்; டிடிவி தினகரன், உதயநிதி ஆகியோர் கண்டனம்

விஸ்வரூபம் எடுக்கும் ஆக்ஸிஜன் விவகாரம்; டிடிவி தினகரன், உதயநிதி ஆகியோர் கண்டனம்

22/Apr/2021 06:18:07

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 11,681 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்புஎண்ணிக்கை10,25,059ஆக உயர்ந்துள்ளது. நேற்று 7,071 பேர் பூரண நலன் பெற்றதை யடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 9,27,440ஆக உயர்ந்துள் ளது. நேற்று மட்டும் 53பேர் பலியானதையடுத்து, மொத்த பலி  எண்ணிக்கை13,258 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலினை எந்தக் காரணத்திற்காகவும் ஏற்க முடியாது. 

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோல் கொரோனா தடுப்பூசியின் விலையை அவரவர் இஷ்டம்போல நிர்ணயிப்ப தையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள் ளார்.

தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்- புறக்கணிப்பு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்:

தமிழகத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா- தெலுங்கானாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் வேறு கொடுக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் எதையும் செய்தார்களா என்ன. 

மாநிலத்தில் அரசு என ஒன்று இருக்கிறது; அதனுடன் கலந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனையே மத்திய அரசுக்கு இல்லாமல் போனதற்கு அடிமைகளின் கையாலாகாத்தனமே காரணம். ஊழல் வழக்குகளில் தப்பிப்பதற்காக ஆரம்பம் முதலே மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்ததன் விளைவே இது. 

அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-ஆவது இடத்தில் உள்ள போது,இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்- புறக்கணிப்பு என  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Top