logo
தீரன்சின்னமலையின் 265-ஆவது பிறந்த நாள்:  உருவ படத்திற்கு கொமதேகவினர் மாலை அணிவித்து மரியாதை

தீரன்சின்னமலையின் 265-ஆவது பிறந்த நாள்: உருவ படத்திற்கு கொமதேகவினர் மாலை அணிவித்து மரியாதை

17/Apr/2021 01:21:43

ஈரோடு,ஏப்: தீரன்சின்னமலையின் 265-ஆவது பிறந்த தினத்தையொட்டி பெருந்துறையில் அவரது உருவ படத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் அவர் அளித்த பேட்டி: 2021 சட்டமன்ற தேர்தல்  முடிவுக்காக காத்திருக்கின்ற சூழலில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு,  கொங்கு மண்டலத்தில் விடுபட்டுப்போன பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, வரும் காலம் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கை யோடு இந்த நிகழ்வில் பங்கேற்கிறோம்.மே 2-ஆம் தேதிக்கு பிறகு அனைவரும் சுறுசுறுப்பாக களத்தில் இயங்கி மக்களுக்கு பணியாற்றுவதற்கு தயாராக கூடிய சூழ்நிலையில் இந்த உறுதியை எடுத்துக் கொள்கின்றோம்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் இருக்கும் கூட்டணி வேட்பாளர்கள் பாதுகாப்புக்காக ஆட்களை நியமித்துள்ளோம்.தலைவர்கள் வேண்டுகோள் வைத்த போதும் பாதுகாப்பை போடாமல் இருப்பது எங்களது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

இன்னும் பொதுமக்களே சந்தேகிக்கும் வகையில் நள்ளிரவில் தேவையில்லாமல் வாகனங்கள் உள்ளே வந்து போவதும் மடிக்கணினியுடன்  சில நபர்கள் சுற்றி திரிவதால் சந்தேகத்தை மேலும் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு என்பது முழுமையாக இருக்கிறது. எதுவும் செய்துவிட முடியாது என நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.

ஆட்சி திரும்ப வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் அவசரம் அவசரமாக சாலைகளின் பெயர்களை மாற்றுகிறார்கள் இருக்கும் பத்து பதினைந்து நாட்களில் இது போன்ற சில்லறை வேலைகளைச் செய்ய முயற்சிக்கிறார்கள் அவர்கள் பெயர் மாற்றம் செய்வதை பார்க்கும் போது இது தில்லியில் இருந்து வந்திருக்கும் அழுத்தம் என்பதில் சந்தேகம் இல்லை.  இந்த ஆட்டம் எல்லாம் மே இரண்டாம் தேதி வரை நடக்குமே தவிர மே 3-ஆம் தேதி அனைத்தும் சரி செய்யப்படும்.

கொரனோ பரவல் அதிகமாக இருப்பதற்கு காரணம் மத்திய மாநில அரசுகளின் மெத்தன போக்கு தான். தடுப்பூசி போட ஆரம்பித்த காலத்தில் தடுப்பூசி திருவிழாவை நடத்தி வேகப்படுத்தி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துவிட்டு எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும்போது தட்டுப்பாடு வந்திருப்பது அரசு வேண்டுமென்றே செய்ததாக பார்க்கின்றோம். 

தற்போது தடுப்பூசிக்கான ஏற்றுமதியை தடை செய்திருக்கிறார்கள். புதிது புதிதாக தடுப்பூசிகளை ஒப்புக் கொள்கின்ற அரசுகள் ஜனவரி மாதத்திலேயே கொண்டு வந்து நிறைய பேருக்கு தடுப்பூசிகளை போட்டிருக்கமுடியும். தடுப்பூசி செலுத்தினாலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம்.

தற்போது பரவல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது யாரை குறை சொல்லியும் தடுக்க முடியாது எந்த பயமும் இல்லாமல் தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொள்ளவேண்டும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல்.. 

 கோடிக்கணக்கான மக்கள் தடுப்பூசிகளை போட்டிருக்கிறார்கள் யாருக்கும் இப்படி நடக்கவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை  தடுத்துக் விடக்கூடாது பயத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது நடிகர் விவேக் பொருத்தவரை நேற்று முன்தினம் அரசு மருத்துவம னையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று பேசி ஊக்கப்படுத்தியவர் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.

இது  வருத்தம் அளிக்க கூடிய செய்தி நடிகர் விவேக்கை பொறுத்தவரை அவர் நடிகர் மட்டுமல்ல சமூகத்திற்குத் தேவையான பல கருத்துகளை சொல்லியவர்.  அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப்பட்டவர்.  சமூகத்தின் பால் அக்கறை கொண்ட நடிகராக விவேக் இருந்தார். அவருடைய மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல சமூகத்திற்கே  பேரிழப்பு என்றார்.

Top