12/Apr/2021 11:44:19
ஈரோடு, ஏப்: ஈரோடு பேருந்து நிலையத்தில் முககவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வரும் பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பஸ்சில் ஏறும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட் டுள்ளது. இதைப்போல் பஸ் கண்டக்டர் டிரைவர் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு வழி முறைகளை முறையாகக் பின்பற்றப்படுவது குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி திங்கள்கிழமை காலை ஈரோடு பேருந்து நிலையத்தில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டார். மேலும் பேருந்து நிலைய வளாகத்துக்குள் முகக்கவசம் அணியாமல் வந்த சில பயணிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதைப்போல் பேருந்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவது குறித்தும்அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.