logo
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியதை போன்றது திமுகவின் தேர்தல் அறிக்கை: ஜி. கே. வாசன்

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியதை போன்றது திமுகவின் தேர்தல் அறிக்கை: ஜி. கே. வாசன்

02/Apr/2021 08:32:31

ஈரோடு, ஏப்: மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியதை போன்றது திமுகவின் தேர்தல் அறிக்கை என்றார் தமாகா தலைவர் ஜி. கே. வாசன். 



தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் இன்று அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் யுவராஜா ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ளன. அதிமுக கூட்டணி வெற்றி நாளுக்கு நாள் பிரகாசமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் வளர்ச்சி திட்டம் சலுகைகளை  மக்கள் வரவேற்றுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்புகிறார்கள். மாறாக திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மேலும் திமுக தேர்தல் அறிக்கை என்பது மண் குதிரையை வைத்து ஆற்றில் இறங்குவது போன்ற கதையாக உள்ளது. 

அதிமுக அரசு தொடர்ந்து மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை 10  வருடமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது.திமுக ஆட்சியில் இது போன்ற திட்டங்கள் சலுகைகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

குறிப்பாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்ப வைத்தனர். அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முடிவுசெய்து விட்டனர். பாரதிய ஜனதா 7 வருடமாக ஆட்சியில் உள்ளது. பெட்ரோல் டீசல் விலை என்பது ஏழை எளிய மக்களின்  அத்தியாவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 


இதன் விலை ஏற்றம் தற்காலிகமானது தான். நிரந்தரம் இல்லை.கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை குறைய தொடங்கியுள்ளது வரும் நாட்களிலும் இது மேலும் குறையும்.  பெட்ரோல் அமைச்சகம் ஆயில் அமைச்சகம் இது குறித்து பேசி நல்ல முடிவு எடுக்கும். 

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்த நன்மைகளை  அண்மைக் காலத்தில எவரும் செய்ததில்லை. 

விவசாய குடும்பத்தில் பிறந்த விவசாயி முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அனைத்து விதமான திட்டங்களையும், சலுகைகளையும்  விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறார். இதை வைத்தே  விவசாயிகள் 100 சதவிதம்  அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர். பொறாமை காரணமாக ஒரு சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் யுவராஜா இந்த மண்ணின் மைந்தன். தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார். அதிமுக கூட்டணி பலமான கூட்டணி. இந்த தேர்தலை பொறுத்தவரை அதிகாரிகள் தேர்தல் ஆணையம் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதிமுக, திமுக, பாமக வினர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதை நாம் அறிந்து கொள்ளலாம் என்றார்.

இதில், எம்எல்ஏ-கே. எஸ். தென்னரசு, தாமாக பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top