29/Mar/2021 08:32:34
புதுக்கோட்டை: பொதுமக்கள் அச்சமின்றி வாழ அதிமுகவை ஆதரியுங்கள் என்றார் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேல்.
இத்தொகுதிக்கு உள்பட்ட வல்லதிராகோட்டை, மணியம்பள்ளம், பெரியநாயகிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து அவர் பேசியது: : விவசாயிகளின் நலன் கருதி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது, வரலாற்று சிறப்பு மிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட விவசாயிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியது அதிமுக அரசு. பெண்கள் முன்னேற்றத்திற்காக அம்மா ஸ்கூட்டர், சுயஉதவிக்குழுக் கடன் ரத்து உள்பட எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. தொகுதி மக்கள் விரும்பாத எந்த திட்டங்களையும் அனுமதிக்க மாட்டோம். மக்களின் பிரச்னைகளை நன்கு அறிந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான், அவர் மக்கள் நலத்திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறார். மக்கள் எவ்வித இடையூறுமின்றி வாழ்ந்ததால் தான் மக்கள் இரண்டுமுறை அதிமுகவை வெற்றி பெற வைத்தனர். அதேபோல, மக்கள் அச்சமின்றி வாழ அதிமுகவை இம்முறையும் ஆதரியுங்கள் என்றார்.பிரசாரத்தின்போது, கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.