 
                                            15/Mar/2021 08:02:52
உடுமலைப்பேட்டையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க அதிமுகவினர் வேட்டி, சேலை, அமைச்சரின் படம் பொறித்த வாட்ச், பேக் உள்ளிட்ட பரிசுப்பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை திமுகவினர் நள்ளிரவில் மடக்கி பிடித்தனர். பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சி பெதப்பம்பட்டி நால் ரோட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க மினி சரக்கு வேனில் பரிசுப் பொருட்களை அதிமுகவினர் கொண்டு செல்வதாக திமுகவினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குடிமங்கலம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்.முருகேசன் உள்ளிட்ட திமுகவினர் சம்பவ இடத்துக்கு சென்று வேனை மறித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மினி வேனில் சேலை, வேட்டி, துண்டு, அமைச்சர் ராதாகிருஷ்ணனின் படம் பொறித்த வாட்ச் உள்ளிட்டவை அடங்கிய 151 பேக்குகள் இருந்தன.
இத்தகவலறிந்த பறக்கும்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். உடுமலை தாசில்தார் அலுவலகத்துக்கு நள்ளிரவு அவற்றை கொண்டு சென்று ஒப்படைத்தனர். இதையடுத்து, தாசில்தார் அலுவலகம் முன்பு உடுமலை நகர திமுக செயலாளர் மைதீன் மற்றும் நிர்வாகிகள் குவிந்தனர். அப்போது, அங்கு அதிமுகவினரும் திரண்டதால்  போலீசார் இருதரப்பினரையும் கலைந்து செல்லுமாறு அனுப்பினர்.