logo
கோட்டை பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்: கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

கோட்டை பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்: கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

26/Sep/2020 04:32:25

ஈரோடு: ஈரோடு மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற  கோட்டை பெருமாள் கோயிலில்  ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கம்  காரணமாக எளிமையான முறையில் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20-ஆம் தேதி கிராம சாந்தி பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தீபாராதனை திருமஞ்சன நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை கோட்டை பெருமாள் ஒவ்வொரு சிறப்பு  வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று மாலை திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற உள்ளது. இதில், கோட்டை பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சம்மேதராக காட்சியளிக்கிறார். இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை)  முக்கிய விழாவான தேர்த் திருவிழா நடைபெற உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை திருவிழா காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டு ஏராளமான பக்தர்களுடன்  வடம் பிடித்து எனது முக்கிய வீதிகள் வழியாக சென்று வருகிறது.  இந்தத்தேர் ஆனது பெரிய மாரியம்மன் கோவில் முன்பு 11 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் கோயில் வளாகத்தில் முன்பு நிலை நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா  வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 9 மணியளவில் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர்த் திருவிழாவில் பங்கேற்க 100 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தேர் இழுக்கப்பட்டு மணிக்கூண்டு, பன்னீர்செல்வம்பூங்கா, மீனாட்சி சுந்தரனார்சாலை, காமராஜர் சாலை வழியாக மீண்டும் ஒரு மணி அளவில் கோவில் வளாகத்துக்கு முன்பு நிலை நிறுத்தப்படுகிறது. தேர் வேறு எங்கும் இடை நிறுத்தம் செய்யப்பட மாட்டாது.  தேரோட்டத்தையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Top