logo
100 சதவீதம் வாக்காளிப்பதை வலியுறுத்தி புதுக்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

100 சதவீதம் வாக்காளிப்பதை வலியுறுத்தி புதுக்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

09/Mar/2021 10:51:05

புதுக்கோட்டை, மார்ச்: வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில்  விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

 புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில்  நடைபெற்ற  விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை  மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமாமமேஸ்வரி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜிசரவணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

 பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படி தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-இல் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு என்ற இலக்கை நோக்கி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


அந்த அடிப்படையில் இன்றையதினம் விளையாட்டு வீரர்கள், துணை இராணுவப்படையினர், காவல்துறையினர், நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் என சுமார்  800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட  விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.


  புதுக்கோட்டை பொது அலுக வளாகத்தில் தொடங்கிய  வாக்காளர் விழிப்புணர்வு  மாரத்தான் ஓட்டம் கீழராஜ வீதி, பிருந்தாவனம், வடக்குராஜ வீதி, மேலராஜ வீதி, சத்தியமூர்த்தி சாலை, ஜல்லிக்கட்டு சிலை, புதிய பேருந்து நிலையம் வழியாகச்சென்று மீண்டும் பொது அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.. 

வாக்காளர்கள் அனைவரும் எதிர்வரும்  ஏப்ரல் 6-ஆம் தேதி  நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்து ஜனநாயகக்கடமையாற்ற  வேண்டும் என்றார் அவர்.


இந்நிகழ்வில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் டெய்சிகுமார், துணை ஆட்சியர் (பயிற்சி) சுகிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சி.கே. ஜெயதேவ்ராஜ், முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


Top