logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  இதுவரை 6,102 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி  போடப்பட்டுள்ளது: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 6,102 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

06/Mar/2021 05:27:10

புதுக்கோட்டை, மார்ச்:  புதுக்கோட்டை மாவட்டத்தில்  இதுவரை 6,102 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி  போடப்பட்டுள்ளதாக  மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொவைட்-19 தடுப்பூசி  போடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன.  

இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில்  36  மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 5,448 சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி  போடப்பட்டுள்ளது.  மேலும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள்    (சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்) அனைவருக்கும் மார்ச் 1 முதல்   தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை 654 நபர்களுக்கு  போடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 11 அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு மையங்களில் தடுப்பூசிகள்  இலவசமாக வழங்கப்படுகின்றன.


மேலும், புதுக்கோட்டை மா.மலர், முத்துமீனாட்சி, முத்துராஜா மல்டி ஸ்பெஷாலிட்டி,  புதுகை ஸ்டார் பொன்னமராவதி  ஸ்ரீதுர்க்கா, அறந்தாங்கி விஜய் , ஸ்ரீமீனாட்சி பாலி கிளினிக் உள்ளிட்ட 9 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி  மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி  செலுத்துவதற்கு ஒரு தவணைக்கு அதிகபட்சமாக  ரூ.250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஸ்மார்ட் அட்டை,  ஓய்வூதிய  அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 

 மாவட்டத்தில்  இதுவரை 6,102 நபர்களுக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பக்கவிளைவுகள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை.  இந்த தடுப்பூசி மருந்துகள் மிகவும் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் ஏதுமற்ற, மிகவும் நம்பிக்கையான மருந்தாகும் . எனவே பொதுமக்கள் அனைவரும் எந்தவிதமான தயக்கமும், சந்தேகமுமின்றி இந்த தடுப்பூ சிகளை போட்டு  கொரோனா நோய் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.


Top