logo
தமிழக மக்களைப்பற்றி கவலைப்படுவதற்கு  ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தமிழக மக்களைப்பற்றி கவலைப்படுவதற்கு ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

15/Feb/2021 02:52:16

புதுக்கோட்டை, பிப்: தமிழக மக்களைப்பற்றி கவலைப்படுவதற்கு  ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஊனையூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் அவர் பேசியது: அதிமுக ஆட்சி  10 ஆண்டுகாலமாக தமிழகத்தை சீரழித்து விட்டார்கள்.

ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதா அதிலிருந்து மீள்வதற்கு ஆறாண்டு காலம் ஆனது அவரது மரணத்திற்குப் பிறகு நான்கு ஆண்டுகாலம் தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக பழனிச்சாமியிலன் பதற்றமான காலம் கழிந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக மக்களைப் பற்றி கவலைப் படுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை.

 ஆனால் வெற்றி நடை போடும் தமிழகம் என்று விளம்பரம் கொடுக்கிறார் பழனிசாமி இது வெற்றி நடை போடக் கூடிய தமிழகம் அல்ல வெற்று நடை போடக் கூடிய தமிழகம். வளமான தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார் பழனிச்சாமி அது உண்மையில் அதிமுகவுக்கு வளமான தமிழகம் என்பதுதான் உண்மை.

தாழ்ந்த தமிழகம்தான் பத்தாண்டு காலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை வேலை வாய்ப்பு இல்லை புதிய முதலீடுகள் இல்லை. மாநில உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. இப்படிப்பட்ட பெரிய  பிரச்னையில் அவர்கள் சரியாக நடந்து  கொள்ளவில்லை. அவர்கள் அனைவரின் கவனமும் ஊழலில்தான் இருந்தது.

 எல்லா துறைகளிலும் ஊழல். இதன்மூலம் மாநிலத்தில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. இப்படி வகை தொகையில்லாமல்  கோடி கோடியாய் கொள்ளை அடிக்கிறார்கள். 

கிராமங்களில் அடிப்படை பிரச்னையான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதற்காகவே  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை முதலில் தொடங்கிவயர்  முதல்வராக இருந்த கருணாநிதிதான்.  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் நல்ல குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டபோது, நான் உள்ளாட்சித் துறை அமைச்சர். என்னை ஜப்பானுக்கு அனுப்பி நிதி பெற்று வரச் சொல்லி, அந்த மாவட்டங்களின் மக்களுக்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, தண்ணீரில்லாத மாவட்டம் என்றழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்துக்கென ரூ. 616 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 

இப்போதுள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர், முதல்வரைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு அனுப்ப வேண்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிதான் இருக்கிறார். ஊழல் செய்வோர் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ்நாட்டில் 10 லட்சம் ஆசிரியர் பயிற்சி பெற்றோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துக் காத்திருக்கிறார்கள். அதேபோல, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் 7 ஆண்டுகளாக வேலையின்றி இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களின் கவலைகள் அனைத்தும் போக்கப்படும்.

கரோனா காலத்திலும் ஊழல் செய்த அமைச்சர்தான் உங்கள் மாவட்டத்தின் அமைச்சர் சி. விஜயபாஸ்கர். கொரோனா மரணத்திலும் பொய் சொன்னவர் அவர். குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேபோல, ஆர்கே நகர் தேர்தல் முறைகேடு மற்றும் வருமான வரித்துறை குற்றச்சாட்டு களுக்கும் சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பாழ்படுத்தியிருக்கிறார்கள்.

வெற்றி நடை போடும் தமிழகம் என்கிறார் முதல்வர். உண்மையில் அது வெத்து நடை போடும் தமிழகமாகத்தான் இருக்கிறது. வளமான தமிழகம் என்கிறார் முதல்வர். உண்மையில் அதிமுகவினருக்கு வளமான தமிழகம்தான். மக்களுக்கு தாழ்ந்த தமிழகமாகத்தான் இருக்கிறது.

மண் அள்ளுவதைப் போல பணத்தை அள்ளுகிறார்கள். பெரிய திட்டங்களைத்தான் நிறைவேற்றவில்லை என்றால் மக்களுக்குத் தேவையான அவசியமான திட்டங்களையும் இவர்கள் நிறைவேற்றவில்லை.2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதிமுக சொன்னவற்றை நிறைவேற்றியுள்ளார்களா.

இரண்டாவது விவசாயப் புரட்சி வரும் என்றார்கள், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்துவதாகச் சொன்னார்கள், விவசாயக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும் என்றார்கள், கரும்பைப் போல மற்ற பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படும் என்றார்கள் இவற்றையெல்லாம் செய்யவில்லை. 


 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதிமுக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றியுள்ளதா.குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு செல்லிடப்பேசி வழங்கப்படும் என்றார்கள், கல்விக் கடனை ரத்து செய்வோம் என்றார்கள், அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும் என்றார்கள், ஒரு லிட்டர் பால் ரூ. 25-க்கு வழங்கப்படும் என்றார்கள், பொது இடங்களில் இலவச இணைய இணைப்பு வழங்கப்படும் என்றார்கள். இவற்றையெல்லாம் செய்தார்களா.

100 நாள்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று உறுதி கூறி இந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும்  நடத்தி ஆயிரக்கணக்கான மனுக்களைப் பெற்று வருகிறேன். இந்தப் பெட்டியை  பூட்டு போட்டு எடுத்துட்டு போறது மட்டும் இல்ல அறிவாலயத்தில் பத்திரப்படுத்தப்படும். திமுக  ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு  இந்தப் பெட்டிகள் கோட்டைக்கு எடுத்துச்சென்று பிரிக்கபடும். இதற்கென ஒரு தனி அதிகாரி குழு அமைக்கப்படும், இதை நிர்வகிக்க தனித்துறை  அமைக்கப்பட இருக்கிறது அதில் இருக்கிற அதிகாரிகள்  அந்த பணியை செய்வார்கள். 100 நாட்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்றி வந்து என்னிடம் கூறுவதுதான் அவர்களுடைய முதல் பணி. அதுவரை இந்த வேலையை தவிர எந்த வேலையையும் பார்க்க கூடாது. அதை திட்டமிட்டுதான் இந்நிகழ்ச்சியை நடத்துகிறேன்.


ஆனால்,  இதை பார்த்து  ஊர் ஊராய் போய்  மக்களிடம் ஸ்டாலின் காது குத்துகிறார் என்கிறார் முதல்வர் பழனிச்சாமி.

தாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாள்களில் பிரச்னையை தீர்ப்போம் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். காது குத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த திட்டத்தை அறிவித்தது நான். 

ஆனால், ஜெயலலிதா கொண்டுவந்த பழைய திட்டத்தை வேறு பெயரிட்டு  நான்தான் கொண்டுவந்தேன் என்று கூறி  ஒரே நாளில் கோடிக்கணக்கான மக்களுக்கு காது குத்தியது பழனிசாமிதான். மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த அனைத்து  வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டேன்  என்று சொன்னதை போல இமாலய  பொய் வேறு எதுவும் இருக்க முடியாது  அவரைப் போல ஏமாற்றிப் பிழைக்க எனக்குத் தெரியாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய தொழில்கள் உருவாக்கப்படும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். இது உறுதி என்றார் ஸ்டாலின். 


நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாதனையாளர்களையும் ஸ்டாலின் மேடைக்கு அழைத்துப் பாராட்டினார்.முன்னதாக ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் எஸ். ரகுபதி மற்றும் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோர் வெள்ளி செங்கோல் மற்றும் நினைவுப்பரிசை வழங்கினர்.


 தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ். ரகுபதி எம்எல்ஏ வரவேற்றார். வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி சிவ. வீ. மெய்யநாதன், திருப்பத்தூர் எம்எல்ஏ கே.ஆர். பெரியகருப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் கவிதைப்பித்தன், உதயம் சண்முகம், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் த. சந்திரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ். ஜெயராமன், புதுக்கோட்டை நகர திமுக செயலர் க. நைனாமுகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள், திமுகவினர் பங்கேற்றனர்.

Top