logo
திமுகவினருக்கு வழக்குரைஞர் அணியினர் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்: அமைப்புச்செயலர் ஆர்.எஸ். பாரதி பேச்சு

திமுகவினருக்கு வழக்குரைஞர் அணியினர் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்: அமைப்புச்செயலர் ஆர்.எஸ். பாரதி பேச்சு

14/Feb/2021 07:09:42

ஈரோடு, பிப்:   திமுக-வினருக்கு பாதுகாப்பு அரணாக வழக்குரைஞர் அணியினர்  இருக்க வேண்டும் என்றார் அக்கட்சியின் மாநில  மாநில அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி.

ஈரோட்டில் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்  அமைக்கப்பட்டுள்ள வழக்குரைஞர் ஆலோசனை மையத்தை திறந்த அவர் மேலும் பேசியதாவது:பிகார் தேர்தலில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் ஒட்டளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இது ஆபத்தானது. அவர்கள் தான் ஓட்டளித்தார்கள் என்பதை உறுதி செய்ய முடியாது. இதேபோல் மாற்று திறனாளிகள் ஓட்டளிக்கும் விதிமுறைகள் மாற்றி இருக்கின்றனர். 

கடந்த தேர்தல்களை விட இம்முறை வேறு விதமாக இருக்கும். பல வாக்காளர்களை திட்டமிட்டு நீக்கி இருக்கிறார்கள். சென்னை காவலர் குடியிறுப்பில் 581 ஓட்டுக்களை நீக்க மனு அளித்தும் நீக்கவில்லை. கடந்த முறை 10 தொகுதிகள் 500க்கும் குறைவான ஓட்டுகளில் தோற்றுள்ளோம். 

பெயர் நீக்கம் சரிவர நடைபெற்று உள்ளதா என்பதை கட்சியினர் சரிபார்க்க வேண்டும். வாக்குச்சாவடி அமைப்பதிலும் மோசடி நடந்துள்ளது. மார்ச் முதல் வாரத்துக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். 80 வயதுடைய வாக்காளர்களை கண்டறிந்து அடையாளப்படுத்த வேண்டும். தேர்தலுக்கு பின் 20 நாட்கள் வரை  ஓட்டு பெட்டி உள்ள ஸ்ட்ராங் ரூமை கண்காணிக்க வேண்டும்.

ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதால் அதிகாரிகள் திமுக வினருடன் நெருங்கி வருகின்றனர். தமிழக ஐஏஎஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் நடுநிலையோடு நடக்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள். வேலுமணி, தங்கமணி எல்லாம் மணியில் ஓட்டிக்கொண்டுள்ளனர். இதனை எதிர் கொள்ளும் சக்தி வழக்குரைஞர் பிரிவுக்கு உண்டு.

 வரும் தேர்தலில் 180 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வருகிறது. அதற்காக அதீத நம்பிக்கையுடன் அஜாக்கிரதையாக  இருந்துவிடக் கூடாது. லோக்சபா தேர்தல் வெற்றியை கருத்தில் கொள்ள கூடாது. சட்டசபை தேர்தல் என்பது வேறு. தேர்தல் தொடர்பான பணி 54 நாட்கள் நாட்கள் தான் உள்ளது. பல பிரச்னைகள் உள்ளன.

 இந்த முறை தேர்தலை அணுகுவதற்கு வழக்குரைஞர் அணியின் பங்களிப்பு இருந்தால் தான் உதவியாக இருக்க முடியும் என்பதை உணர்ந்த தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திலும் வழக்குரைஞர் ஆலோசனை மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். அந்த வகையில் வழக்குரைஞர் ஆலோசனை மையம் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் திறக்கப்பட்டுள்ளது. எனவே, திமுகவினருக்கு வழக்குரைஞர்  பிரிவு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்றார் ஆர்.எஸ். பாரதி. இதில் வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள், திமுக தெற்கு மாவட்ட செயலர் சு. முத்துசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Top