logo
கிரிக்கெட் பேட் கேட்டு சிறுவர்கள் மனு... சில மணிநேரத்தில் கோரிக்கையை நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்

கிரிக்கெட் பேட் கேட்டு சிறுவர்கள் மனு... சில மணிநேரத்தில் கோரிக்கையை நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்

10/Feb/2021 12:36:36

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்காக தேனிக்கு சென்ற நிலையில் அவரின் காரை இடையில் வழிமறித்த சிறுவர்கள் சிலர், கிரிக்கெட் பேட் தருமாறு துண்டுப்பேப்பரில் கடிதமாக எழுதி கொடுத்த நிகழ்வு வைரலானது.

சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார். காரில் உதயநிதி சென்றுக் கொண்டிருந்த போது கன்னியப்ப பிள்ளைபட்டி கிராமத்தில் காரை சிறுவர்கள் சிலர் வழிமறித்தனர்.

காரை சூழ்ந்துக் கொண்ட அந்த சிறுவர்களிடம் கார் கண்ணாடியை கீழே இறக்கி உதயநிதி பேசினார். அப்பொழுது அவரிடம் துண்டுப்பேப்பரில் எழுதப்பட்ட ஒரு கடிதம் ஒன்றை சிறுவன் ஒருவன் கொடுத்தான். அதில், அன்புள்ள திமுக கட்சியினர் என்றும் எங்களுக்கு கிரிக்கெட் பேட் தேவைப்படுவதால், நீங்கள் கிரிக்கெட் பேட் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் எனவும் எழுந்தப்பட்டுள்ளது.


அதுமட்டுமின்றி, முடிவில் அன்புள்ள கன்னியப்பபிள்ளைபட்டி பாய்ஸ் என்றும், பாண்டீஸ், மனோ ரஞ்சன், கிருஷ்ணா மற்றும் ஹேம்ரீஷ்வரன் என்ற பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர்களின் கடித்தத்தை பிரித்து பார்த்த உதயநிதி ஸ்டாலின் அதனை பெற்றுக் கொண்டு காரில் இருந்தபடியே அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

கடிதத்தில் தொடர்புக்கு செல்போன் எண்ணையும் சிறுவர்கள் குறிப்பிட்டிருந்த நிலையில் சில மணிநேரத்திற்குள்ளே அந்த சிறுவர்கள் அனைவருக்கும் கிரிக்கெட் பேட் பந்து வாங்கிக் கொடுத்து ஆசையை நிறைவேற்றியதுடன் அவர்களுடன் புகைப்படமும்  எடுத்துக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

Top