logo
தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பாரதிய கிசான் சங்கம் பங்கேற்பு: தவறான செய்தி என பாரதிய கிசான் சங்கம்  மறுப்பு

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பாரதிய கிசான் சங்கம் பங்கேற்பு: தவறான செய்தி என பாரதிய கிசான் சங்கம் மறுப்பு

26/Dec/2020 10:28:55

சென்னை:  இது குறித்து பாரதிய கிசான் சங்க  தென் பாரத அமைப்பாளர்  ஸ்ரீகணேசன் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வேளாண் தொழில் தொடர்பான மூன்று சட்டங்களை அண்மையில் இயற்றியுள்ளது. நாட்டின் 70 சதவீத மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் சட்டமியற்றுவதை பாரதிய கிசான் சங்கம் வரவேற்கிறது.

 இந்த சட்டங்களால் விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு பாதகமில்லை என்றும், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்ந்து நீடிக்கும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தியதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போதைய நவீன யுகத்திற்கேற்ப விவசாயத் துறையை மேம்படுத்த இத்தகைய சட்டங்கள் அவசியம் என்று கருதுகிறோம்.

அதே நேரத்தில் இந்த சட்டங்களில் தேவையான திருத்தங்களையும் கொண்டு வந்து மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற கார்ப்பரேட் நிறுவனங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஷரத்தையும், விவசாயத் துறை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் என்ற ஷரத்தையும் உடனடியாக சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

 மேலும், எல்லா தரப்பினரும் பங்கு கொள்ளும் விதத்தில் நிபுணர் குழு ஒன்றை அமைத்து எல்லா கோணங்களிலும் திறந்த மனதுடன் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்திட ஆலோசிக்க வேண்டும் என்று பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்யும் கம்பெனிகள்அரசு பதிவு பெற்றதாகவும் வங்கி உறுதியுடன் கூடிய வசதியை பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்துகிறது.

ஆனால், இந்த சட்டங்களைப் பற்றி தவறான கண்ணோட்டத்துடன் மக்களை திசை திருப்பும் அரசியலை விவசாயிகள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். தற்போதைய உலகில் வேளாண் தொழிலில் புது பாய்ச்சலை ஏற்படுத்தும் சட்டங்களை நீக்குவதற்காக நடைபெறும் முயற்சிகளை கண்டிக்கிறோம். அத்தகைய தவறான பிரசாரங்களின் விளைவே, கரோனா தொற்று பரவியுள்ள இந்த காலகட்டத்தில் கடந்த மாதம் இறுதி முதல் தில்லியில் விவசாயிகள் போராட்டம்  நடத்த தூண்டப்படுகின்றனர்.

அதேபோல, தில்லியில் போராடும் பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பு, 1970-களில் முன்னாள் பிரதமர் சரண் சிங் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட விவசாயிகளின் அமைப்பாகும். பிற்காலத்தில் இந்த அமைப்பு அரசியல் காரணமாக இரண்டு பிரிவுகளானது. மேலும், நாராயணசாமி நாயுடு தலைமையிலான தமிழ்நாடு விவசாய சங்கமும் பாரதிய கிசான் யூனியனில் இருந்து வெளியேறிவிட்டது. தற்போது ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களுக்குள் அந்த அமைப்பு சுருங்கிவிட்டது.

 அதேபோல, பாரதிய கிசான் சம்மேளனம் என்ற அமைப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடையதாகும். இந்த இரண்டு அமைப்புகளுக்கும் எங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. பாரதிய கிசான் சங்கம் என்ற எங்கள் அமைப்பு, 1979-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அரசியல் சார்பற்ற நாடு தழுவிய விவசாய அமைப்பாகும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் அமைப்பில் ஆயிரக்கணக்கானோர் இயங்கி வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் உள்ள சில தனியார் தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் பாரதிய கிசான் சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெறுவதாக தவறான செய்தியை வெளியிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கின்றன. பெயரை மாற்றி எழுதி எங்கள் பாரதிய கிசான் சங்கத்தைப் பற்றி தவறாக சித்திரிக்கின்றன. இது சட்டவிரோதமாகும்.

ஊடகங்கள் எங்கள் அமைப்பின் பெயரை தில்லி போராட்டத்துடன் இணைப்பதை நிறுத்திக் கொண்டு உண்மையான தகவல்களை சரிபார்த்து வெளியிட வேண்டும். தொடர்ந்து எங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தினால் சட்டபூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்

Top