logo
தாம்பரம்-திண்டிவனம் இடையேயுள்ள 2 சுங்கச்சாவடிகளின் நிலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவு

தாம்பரம்-திண்டிவனம் இடையேயுள்ள 2 சுங்கச்சாவடிகளின் நிலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவு

08/Feb/2021 04:21:02

தாம்பரம் - திண்டிவனம் இடையே உள்ள 2 சுங்கச்சாவடிகளின் நிலை குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஏ.ஜோசப் சகாயராஜ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை தாம்பரம் - திண்டிவனம் இடையே பரணூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைக்கான சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  தாம்பரம் திண்டிவனம் இடையிலான பகுதியில் நெடுஞ்சாலை பணிகளை முடிக்க பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்ஆர் என்ற தனியார் நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுங்கக்கட்டணம் வசூலிக்கும் உரிமம்  காலாவதியாகிவிட்டது. எனவே பரணூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கத் தனியார் நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் சாலையின் தற்போதைய நிலை குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை  6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 


Top