logo
மத்தியஅரசைக் கண்டித்து ஈரோட்டில் 7-ஆவது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்

மத்தியஅரசைக் கண்டித்து ஈரோட்டில் 7-ஆவது நாளாக மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்

07/Feb/2021 03:40:01

ஈரோடு, பிப்: ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சையைச் செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள காலி இடத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை  7-ஆவது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நீடித்து வருகிறது.  இந்திய மருத்துவ சங்கத்தின் மகளிர் அணி சார்பில் ஏராளமான பெண் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்றனர். இந்திய மருத்துவ சங்கத்தின் மகளிர் அணி மாநிலத் தலைவி சித்ரா தலைமை வகித்தார். 

 மாநில தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் சி.என். ராஜா கலந்து கொண்டு பேசினார்.  ஏற்பாடுகளை, மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் நான்சி, டாக்டர் பூர்ணிமா ஆகியோர் செய்திருந்தனர். 

இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட கிளைத் தலைவர் பிரசாத், மாநில துணைத்தலைவர் மல்லிகா, மாவட்ட செயலாளர் செந்தில்வேல், முன்னாள் மாவட்ட தலைவர் சுகுமார், விஜயகுமார் உள்பட நூற்றுக்கணக்கான டாக்டர்கள் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து இந்த சங்கத்தின் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

7-ஆவது நாளாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது. வரும் 14-ஆம் தேதி வரை இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகு எங்கள் சங்கத்தின் உயர்மட்ட குழு கூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். இந்தியா முழுவதும் 50 இடங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 8 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.

Top