logo
புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் முப்பெரும் விழா

புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் முப்பெரும் விழா

06/Feb/2021 11:31:45

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கம் சார்பில் தவத்திரு  சங்கரதாஸ் சுவாமிகள் 98 -ஆவது குருபூஜை விழா  மற்றும் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் 73-ஆவது ஆண்டு விழா, கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது  ஆகிய முப்பெரும் விழா(பிப்.6) சனிக்கிழமை  நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் சார்பில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 98 -ஆவது குருபூஜை மற்றும் நாடக சங்கத்தின் 73 -ஆவது ஆண்டு நாடக விழா மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில்  நடைபெற்றது.

 கலை பண்பாட்டுத் துறை ஆணையர் கலைஅரசி தலைமையில் நடைபெற்ற விழாவில்   சிறப்பு  விருந்தினராக புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி  , முன்னாள் உறுப்பினர் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் பங்கேற்று விழாவைத்தொடங்கி வைத்து வாழ்த்தினார்.

இதையடுத்து,  மாவட்டக் கலைமன்றம் மூலம் கலைத்துறையில் சாதனைப்படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவில் வழங்கப்படும் கலைமுதுமணி விருது சதிர் கலைஞர் விராலிமலை முத்துக் கண்ணம்மாளுக்கும், கலை நன்மணி விருது கிராமிய தவில் கலைஞர் கோலேந்திரம் ராஜேந்திரனுக்கும், கலைச்சுடர்மணி விருது கொத்தமங்கலத்தை சேர்ந்த சிற்பி திருநாவுக்கரசுக்கும், கலைவளர்மணி விருது கிராமிய இசைக்கலைஞர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமிக்கும், கலை இளமணி விருது ஓவியப்பிரிவில் கல்கிச் செல்வன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 மேலும் விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Top